×

அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சியில் நீர்நிலைகள் எதுவும் தூர் வாரப்படவில்லை: அமைச்சர் துரைமுருகன் குற்றசாட்டு

சென்னை: ‘‘அதிமுகவின் பத்தாண்டு ஆட்சியில், நீர்நிலைகள் எதுவும் தூர் வாரப்படவில்லை’’ என, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத் தடுப்புப் பணிகளை முடிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைக்கால வெள்ளத் தடுப்பு பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை போரூர் ஏரி  பகுதியில் நடைபெற்று வரும் மதகு மற்றும் மழை நீர் கால்வாய் பணிகளை அவர் ஆய்வு செய்தார். பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘ ‘‘வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறி, ரூ. 20 கோடியை கடந்த செப்டம்பர் 22ம் தேதி ஒதுக்கீடு செய்தார்கள். கடந்த 25 நாட்களுக்குள் 95 சதவீதம் பணிகளும், சில இடங்களில் 90 சதவீதமும் பணிகள் முடிந்துள்ளன. இந்த வேலைகளை துரிதப்படுத்த வேண்டும் என்பதற்காக, நான் பல்வேறு இடங்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்து வருகிறேன். மீதம் உள்ள பணிகளை இன்னும் ஐந்து, ஆறு நாட்களுக்குள் முடித்து விட வேண்டும் என, அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளேன்.

சில இடங்களில் இப்பணிகள் முடிய இன்னும் பத்து, பதினைந்து நாட்களாகும். சென்னையில், இந்த ஆண்டு வெள்ள பாதிப்பு  இருக்காது. நான் அமைச்சராக பதவி ஏற்று பிறகு, தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தபோது, எந்த பணிகளும் நடைபெறவில்லை என்பது தெரியவந்தது. கலைஞர் ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஏரி, குளம்  தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்தன. அதிமுகவின் கடந்த பத்து ஆண்டு ஆட்சியில் கால்வாய், ஏரி, குளம் தூர் வாரும் பணிகளை செய்யாமல் விட்டு விட்டார்கள். இப்போது எல்லா பணிகளையும் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்தப் பணிகளை நிதி ஆதாரத்தின்படி செய்து கொண்டிருக்கிறோம் என்றார். இந்த ஆய்வின்போது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நீர்வளத் துறை செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Tags : AIADMK ,Minister ,Duraimurugan , AIADMK's 10-year rule did not drain any water bodies: Minister Duraimurugan alleges
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...