பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையம் அறிக்கை, பல்வேறு மசோதாக்கள் தாக்கலாகிறது: எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்ட தொடரின் போது ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கலாகிறது. மேலும் பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கலாக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு முக்கிய முடிவு எடுக்கிறார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூடத்தில் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ், இங்கிலாந்து ராணி எலிசபெத் உள்ளிட்ட தலைவர்கள் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.

மேலும் அண்மையில் காலமான கோவைத்தங்கம் உள்ளிட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவு குறித்தும் இரங்கல் தெரிவிக்கப்படும். அதன்பிறகு சட்டசபையின் இன்றைய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும். அதன் பிறகு 11 மணி அளவில் சபாநாயகர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும். இந்த கூட்டத்தில் சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். அனேகமாக சட்டப்பேரவை கூட்டம் 4 நாட்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த கூட்ட தொடரில் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் முழு விவரமும் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையையும் வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கையும் தாக்கலாக வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாமல் ஆன்லைன் ரம்மிக்கு தடை மசோதா அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கூட்டத் தொடரில் துணை நிலை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதற்கிடையில் சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் இடையில் உச்சக்கட்ட மோதல் உருவானது.  தொடர்ந்து இருவரும் தனித்தனியாக செயல்பட தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து கட்சியை முழுமையாக கைப்பற்றுவதற்கான முயற்சியில் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளார். இதற்காக பொதுக்குழுவை கூட்டி பொதுச் செயலாளர் ஆகி விடலாம் என்று எடப்பாடி நினைத்து இருந்தார். ஆனால், ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதிமுக பொதுக்குழுவை கூட்ட இடைக்கால தடை ஆணையை பெற்றார்.

இதனால், எடப்பாடிக்கு பொதுச் செயலாளர் ஆவதில் தொடர் பின்னடைவு ஏற்பட்டது. மேலும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். மேலும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்க வேண்டும். அவருக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஒதுக்க வேண்டும். அலுவல் ஆய்வு கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமாரை அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதினார்.

அதில், ‘அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான் தான். இதனால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவுகள் எடுப்பதாக இருந்தாலும் தன்னை தான் கலந்து ஆலோசிக்க வேண்டும்’’ என்றும் தெரிவித்து இருந்தார். இதே போல ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் போட்டி போட்டு கொண்டு சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு, ‘‘எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணை தலைவர் இருவரும் கடிதங்கள் தந்துள்ளனர். என்னுடைய பரிசீலனையில் உள்ளது. சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது எடுக்கப்படும். யாருக்கு எந்த இருக்கை என்பது என்னுடைய முடிவு’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூட உள்ளது சபாநாயகர் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பது தெரியவரும். இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தாங்கள்தான்  அதிமுக என கூறிவருகின்றனர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் இதுவரை முடிவு  எடுக்கவில்லை. அதனால் இப்பிரச்னை தனது பரிசீலனையில் உள்ளதாக சபாநாயகர்  தெரிவித்துள்ளார். எனவே பழைய நிலையே தொடரும் வாய்ப்புள்ளது. அப்படியிருக்கும்பட்சத்தில் பேரவையில் எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அருகருகே அமரும் நிலை ஏற்படும்.

Related Stories: