×

விசாகப்பட்டினம் விமானநிலையம் எதிரே பரபரப்பு; அமைச்சர் ரோஜா மீது தாக்குதல்: உதவியாளர், போலீசார் படுகாயம்

திருமலை: விசாகப்பட்டினம் விமான நிலையம் எதிரே அமைச்சர் ரோஜா உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடந்தது. இதுதொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ஜனசேனா கட்சி நிர்வாகிகள் 25 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநில அரசு ராயலசீமா, கடலோர ஆந்திரா, வட ஆந்திரா ஆகிய 3 பகுதிகளுக்கும் சம வளர்ச்சி அளிக்கும் விதமாக 3 தலைநகர் என்ற கொள்கையுடன் விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும், கர்னூலை நீதிமன்ற தலைநகராகவும், அமராவதியை சட்டப்பேரவை தலைநகராகவும் அறிவித்தது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, ஒரு மாநிலம் ஒரு தலைநகர் என வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மாநிலத்திற்கு 3 தலைநகரம் அமைக்க வேண்டும் என வட ஆந்திரா கூட்டு நடவடிக்கை குழுவினர் நேற்று விசாக கர்ஜனை என்ற பெயரில் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். விசாகப்பட்டினம் எல்ஐசி அலுவலகம் அருகே உள்ள அம்பேத்கர் சிலையிலிருந்து கடற்கரை சாலையில் உள்ள ஒய்எஸ்ஆர் சிலை வரை பேரணி நடைபெற்றது. இதில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நேரடி ஆதரவு தெரிவித்ததோடு அமைச்சர்கள் ரோஜா, ஜோகிரமேஷ், எம்எல்ஏக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பேரணி முடிந்த பின்னர் அமைச்சர்கள் ரோஜா, ஜோகிரமேஷ், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி உள்ளிட்டவர்கள்  விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு வந்தனர்.

அதேபோல் ஜனசேனா கட்சியின் தலைவரான நடிகர் பவன்கல்யாண் விசாகப்பட்டினத்தில் மூன்று நாள் ஜனவாணி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விசாகப்பட்டினம் விமான நிலையம் வர இருந்தார். அவரை வரவேற்பதற்காக 300க்கும் மேற்பட்ட ஜனசேனா கட்சி தொண்டர்கள் கூடியிருந்தனர்.

அப்போது ஜனசேனா கட்சியினர் அமைச்சர்கள் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, அவர்களது வாகனங்களை தாக்கினர். இதில் அமைச்சர் ரோஜாவின் உதவியாளருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் நாகேஸ்வரராவ் மற்றும் போலீசாரும் படுகாயம் அடைந்தனர். பொதுமக்கள் பலரும் காயம் அடைந்தனர். விமான நிலையத்தில் வெளியே இருந்த பொருட்கள் சேதமாகின.

இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பாக ஜனசேனா அமைப்பினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர். காவல்துறை பணிக்கு இடையூறு விளைவித்ததாகவும், அமைச்சர்களை கொல்ல முயன்றதாகவும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் பவன் கல்யாண் தங்கி உள்ள ஓட்டலில் போலீசார் கட்டுப்பாடுகளை விதித்தனர்.

இன்று நடக்கும் ஜனவாணி நிகழ்ச்சியில் பவன் கல்யாண் பங்கேற்கிறார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Visakhapatnam Airport ,Minister ,Roja , Busy in front of Visakhapatnam Airport; Attack on Minister Roja: Aide, police injured
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...