×

களக்காடு மலையடிவாரத்தில் ‘கரடி’ புதைப்பு; மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பல்: பரபரப்பு தகவல்கள்

நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் மூலம் வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு வாழும் புலி, சிறுத்தை, கடமான், யானை, பன்றி, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் சமீபகாலமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி அடிக்கடி ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இது ஒரு புறமிருக்க மறுபுறம் அவ்வாறு ஊருக்குள் வரும் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வனத்துறை துணை இயக்குநர் ரமேஷ்வரன் தலைமையில் தனிப்படை அமைத்து ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டது.

இதில், கீழவடகரையில் உள்ள ஒரு குளத்துப்பகுதியில் கரடியின் உடல் புதைக்கப்பட்டு உள்ளதாக களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராமேஷ்வரன் தலைமையில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தோண்டி பார்த்த போது கரடியின் எலும்பு கூடு மற்றும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டது. அவைகளை கால்நடை மருத்துவர் மனோகரன் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் புதைக்கப்பட்ட கரடி உயிரிழந்து 15 நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும், கரடிக்கு 8 வயது இருக்கும் என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:

கீழவடகரை மலையடிவாரத்தில் உள்ள விவசாய தோட்டங்களில் ஒரு கும்பல் சட்டவிரோதமாக மின்சார வேலி அமைத்து தொடர்ச்சியாக வனவிலங்குகளை வேட்டையாடி வந்துள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்த கரடியை தான் அந்த கும்பல் குளத்தில் குழி தோண்டி புதைத்துள்ளனர். குறிப்பாக அந்த கும்பல் மின்வேலி மூலம் கடமான், பன்றி, முயல், உடும்பு உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி கறியை பங்கு போட்டு வந்துள்ளனர். மின்வேலியில் கரடி போன்ற விலங்குகள் சிக்கி பலியானால் அதனை ரகசியமாக புதைத்ததும் அம்பலமாகியுள்ளது என்றனர். இதனிடையே வனவிலங்குகளை வேட்டையாடிய கணேசன் (54) என்பவரை வனத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விஐபிக்களுக்கு தொடர்பு: வனத்துறை துணை இயக்குநர் ரமேஷ்வரன் கூறுகையில், நாங்கள் தொடர்ந்து நடத்திய விசாரணையில் 100க்கும் மேற்பட்ட வனவிலங்குகளை வேட்டையாடியிருக்கலாம் என்று தெரிகிறது. இதன் பின்னணியில் முக்கிய உள்ளூர் விஐபிக்களும் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் தொடர்புடையவர்களின் பட்டியலில் இதுவரை 20 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். குற்றவாளிகள் அனைவரும் பாரபட்சமின்றி கைது செய்யப்படுவார்கள் என்றார்.

Tags : Kalakadu Foothills , 'Bear' Burial at the foothills of Kalakadu; Gang poached wildlife by erecting electric fence: sensational news
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...