கனமழையால் போடிமெட்டு மலைச்சாலையில் 7 இடங்களில் ‘திடீர் அருவிகள்’: போடி - மூணாறு இடையே போக்குவரத்து நிறுத்தம்

போடி: கனமழை காரணமாக போடிமெட்டு மலைச்சாலையில் பல இடங்களில் அருவிகள் போல உருவாகி மழை நீர் கொட்டுவதால், போடி - மூணாறு இடையே போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் முக்கிய சாலையாக போடி மெட்டுமலைச்சாலை உள்ளது. இப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், நேற்று மாலை போடிமெட்டு மலைச்சாலை 7வது கொண்டை ஊசி வளைவு, புலியூத்து பகுதி என 7க்கும் மேற்பட்ட இடங்களில் மழை நீர் செம்மண் போல அருவி போல கொட்டி வருகிறது.

இதனால் போடியில் இருந்து கேரள மாநிலம், இடுக்கி மாவட்ட பகுதிகளில் உள்ள ஏலத்தோட்டத்திற்கு 100க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் ஏற்றிச் சென்ற ஜீப்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் சாலையில் அணிவகுத்து நின்றன. அதேபோல், 17வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சிறு நிலச்சரிவு ஏற்பட்டு, மரங்கள், பாறைகள் சரிந்து பாதையை மறைத்துள்ளது. இதனால் இச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதே நிலை தொடர்ந்தால், ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதால், போலீசார் மற்றும் மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: