முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 91 வது பிறந்தநாள் நினைவிடத்தில் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனை: மாணவ, மாணவிகள் மலர் தூவி அஞ்சலி

ராமேஸ்வரம்:  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று பேக்கரும்பிலுள்ள அவரது நினைவிடத்தில் கலாம் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையொட்டி நேற்று காலை நினைவிடத்திற்கு சென்ற கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதீன் தலைமையிலான குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். கலாமின் பேரன்கள் ஷேக்தாவூத், ஷேக்சலீம், சினிமா நடிகர் தாமு, ராமேஸ்வரம் முஸ்லிம் ஜமாத் தலைவர் அவுல் அன்சாரி, நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் படித்த எண் 1 நடுநிலைப்பள்ளியில் கலாமின் பிறந்தநாளையொட்டி பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலாமின் படத்திற்கு தலைமை ஆசிரியை ராஜலெட்சுமி தலைமயில் சக ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பள்ளி மேலாண்மை குழுவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். கலாமின் நண்பர் டாக்டர் விஜயராகவன் தலைமையில் ஏராளமானோர் கலாமின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

Related Stories: