சென்னையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு சிலையுடன் மணிமண்டபம்: இளைஞர் சங்கம் கோரிக்கை

சென்னை: சென்னையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு உருவ சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 91வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பில் மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் தலைமையில் ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மு.பாண்டியராஜன், வேந்தர், சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு இளைஞர்கள் சங்க தென் மண்டல தலைவர் ஆர்.மாதேஸ்வரன், தென் மண்டல செயலாளர் சி.ஆர்.ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தமிழ்நாடு இளைஞர்கள் சங்க மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் அளித்த பேட்டியில், ``டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான பணிகள் நடந்து வருகிறது. தற்போது, அந்த கட்டிடத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. புதிய கட்டிடத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அந்த புதிய கட்டிடத்திற்கு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உருவ சிலையோடு அவரது பெயரை சூட்ட வேண்டும். மேலும் அக்டோபர் 15ம் தேதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாளுக்கு ஒன்றிய அரசு தேசிய விடுமுறை அளிக்க வேண்டும். ெசன்னையில் அப்துல்கலாமின் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும்” என்றார்.

Related Stories: