×

ஆரணி அருகே பரபரப்பு சென்னை போலீஸ்காரர், தங்கைக்கு பேய் விரட்டுவதாக ரகசிய பூஜை: நரபலி கொடுக்க திட்டமா? கதவை உடைத்து மீட்டது போலீஸ்

ஆரணி: ஆரணி அருகே சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் மற்றும் அவரது தங்கைக்கு பேய் விரட்டுவதாக கூறி ரகசிய பூஜை நடத்தப்பட்டுள்ளது. தகவலறிந்து போலீசார் 4 மணி நேரம் போராடி கதவு உடைத்து புகுந்து அவர்களை மீட்டனர். நரபலி கொடுப்பதற்காக பூஜை நடந்ததா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் விவசாயி தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள். இதில், மகளை ஆரணி அருகே மின்வாரியத்தில் பணிபுரிபவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். மூத்த மகன் சென்னையில் ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், விவசாயி மகளுக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பேய் பிடித்துள்ளது என கருதிய பெற்றோர் மற்றும் கணவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூரில் உள்ள ஒரு சாமியாரிடம் அழைத்து சென்றுள்ளனர். பின்னர், மகளை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் ஆயுதப்படையில் பணிபுரியும் அவரது மகன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த மருமகன், எனது மனைவியை பிடித்தது போல் உங்களது மகனுக்கும் பேய் பிடித்துள்ளது. இருவருக்கும் சாமியாரிடம் மந்திரித்து வந்து, வீட்டில் ஒரு பூஜை செய்தால்தான் சரியாகும், குடும்பம் நன்றாக இருக்கும் என கூறினாராம். இதனால் பயந்துபோன அவரது பெற்றோர் மீண்டும் சாமியாரிடம் சென்று, அவர் மந்திரித்து கொடுத்த பொருட்கள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து, கடந்த 3 நாட்களாக அவர்கள் யாரும் அக்கம்பக்கத்தினரிடம் பேசாமல் இருந்ததுடன், வீட்டில் பூஜை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் விவசாயி மருமகன் தனது தாய்க்கு போன் செய்து, `நீ அங்கிருந்தால் இறந்துவிடுவாய். நாங்கள் இங்கே பூஜை செய்ய உள்ளோம். இங்கே வந்துவிடு’ என கூறியுள்ளார்.

பின்னர், விவசாயி தம்பதி, அவரது மகள், 2 மகன்கள் மற்றும் மருமகன் ஆகியோர் உள்பக்கம் வீட்டை பூட்டிக்கொண்டு சாமியார் கொடுத்தனுப்பிய பொருட்கள், மந்திரித்து கொடுத்த தண்ணீரை வைத்து பூஜை செய்ய தொடங்கினர். அப்போது, அங்கு வந்த மருமகனின் தாயை வீட்டிற்குள் அழைத்து கொண்டனர். அவர், உள்ளே சென்று பார்த்தபோது அனைவரின் முகத்திலும் மஞ்சள், குங்குமம் பூசி கொண்டு இருந்ததுடன், 4 பொம்மைகளை வைத்து பூஜை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கேட்டதில் ஆத்திரமடைந்த அவர்கள், அவரது கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டு, வீட்டை பூட்டிக்கொண்டு மீண்டும் பூஜை செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் பயந்துபோன அவரது தாய் கூச்சலிட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறக்கும்படி கூறியும் திறக்கவில்லை. நரபலி கொடுக்க பூஜை நடக்கிறதா என சந்தேகமடைந்த அவர்கள் உடனே ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தாசில்தார் ஜெகதீசன் மற்றும் போலீசார் வந்து வீட்டின் கதவை திறக்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் கதவை கதவை திறக்காததால், பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து, கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அவர்கள்  உள்ளேவிடாமல் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் குடும்பத்தினர் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றியுள்ளனர். இருந்தபோதிலும் உள்ளே சென்று 6 பேரையும் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் போலீசார், நரபலி கொடுப்பதற்கு பூஜை செய்யப்படுகிறதா, சாமியார் யாரேனும் உள்ளார்களா என வீடு முழுவதும் தேடி பார்த்தனர். குடும்பத்தை சேர்ந்த 6 நபர்களை தவிர வேறு யாரும் இல்லை. பேய் விரட்டுவதற்காக பூஜை நடத்தினார்களா அல்லது நரபலி கொடுப்பதற்காக முயற்சி ஏதேனும் நடந்துள்ளதா என விவசாயி குடும்பத்தினர் 6 பேரிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Arani ,Chennai , Busy near Arani, Chennai policeman, secret pooja to ward off ghosts for his sister: plan to perform human sacrifice? The police broke down the door and rescued him
× RELATED 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...