வாடகை தாய் விவகாரத்தில் திடீர் திருப்பம் தமிழக குழுவிடம் நயன்தாரா - விக்னேஷ்சிவன் அறிக்கை

சென்னை: வாடகை தாய் விவகாரத்தில் திடீர் திருப்பமாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பே தங்களுக்கு பதிவு திருமணம் நடந்ததாகவும், 9 மாதங்களுக்கு முன்பு குழந்தை தொடர்பான ஒப்பந்தம் போட்டுள்ளோம். அதன்பின்னர்தான் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய சட்டம் தங்களுக்கு பொருந்தாது என்றும் தமிழக அரசின் குழுவிடம் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் அறிக்கை அளித்துள்ளனர். நடிகை நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை ஓடிடிக்கு விற்பனையும் செய்தனர். திருமணத்திற்கு விஐபிக்களை மட்டுமே அழைத்திருந்தனர். விக்னேஷ் சிவனின் உறவினர்களைக் கூட அழைக்கவில்லை என்ற தகவல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில் வாடகை தாய் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றதாக இருவரும் அறிவித்தனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. திருமணம் முடிந்து 4 மாதத்தில் எப்படி குழந்தையை பெற்றிருக்க முடியும். அப்படி என்றால் திருமணத்திற்கு முன்னரே குழந்தைக்கு ஏற்பாடு செய்தார்களா, தற்போதைய வாடகை தாய் சட்டப்படி அரசிடம் முறைப்படி பதிவு செய்யாதது ஏன், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. சட்டத்தை மீறியிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இருவரிடமும் விளக்கம் கேட்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கூறியிருந்தார். இந்தநிலையில் தமிழக அரசின் குழுவிடம், நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தரப்பில் அறிக்கை வழங்கப்பட்டது. அதில், தங்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்னரே பதிவு திருமணம் நடந்து விட்டது.

ஆனால் அதை நாங்கள் முறைப்படி அறிவிக்கவில்லை. உலகத்திற்கு அறிவிப்பதற்காக திருமணத்தை ஜூன் மாதம் நடத்தினோம். அதேநேரத்தில், நாங்கள் கடந்த டிசம்பர் மாதம், வாடகைதாயுடன் ஒப்பந்தம் செய்து விட்டோம். அதன்படி 9 மாதத்தில் தனியார் மருத்துவமனையில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. மேலும், கடந்த ஜூலை மாதம்தான் வாடகை தாய் தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டது. இதனால் சட்டம் இயற்றுவதற்கு முன்னரே நாங்கள் முறைப்படி ஒப்பந்தம்போட்டு, குழந்தை பெற்றுள்ளோம். இதனால் எங்கள் விவகாரத்தில் முன்தேதியிட்டு சட்டத்தை அமல்படுத்த முடியாது. நாங்கள் தற்போது சட்டப்படிதான் குழந்தை பெற்றுள்ளோம் என்று கூறியுள்ளனர். அப்படி என்றால் 6 ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் செய்து, சினிமாவில் நடிப்பதற்காக அவர்கள் அறிவிக்காமல் இருந்ததும், பின்னர் பண ஆசையில், தங்கள் திருமணத்தை நடத்தி அதை வீடியோ எடுத்து ஓடிடியில் விற்பனை செய்து பல கோடி சம்பாதித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

எல்லாமே ஒரு வியாபார நோக்கோடு நடந்துள்ளது. அதேநேரத்தில் அவர்கள் முன் கூட்டியே ஒரு பெண்ணுடன் ஒப்பந்தம்போட்டு குழந்தை பெற்றிருந்தாலும், சட்டம் ஜூலை மாதம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்பின்னராவது அவர்கள் தங்கள் வாடகை தாய் விவகாரத்தை பதிவு செய்திருக்கலாம். ஆனால் முன் கூட்டியே ஒப்பந்தம்போட்டு விட்டோம் என்று பதிவு செய்யாமல் இருப்பதும் சட்டப்படி குற்றம்தான் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் நடிகை நயன்தாராவின் அறிக்கையை அதிகாரிகள் ஏற்றுக் கொள்வார்களா அல்லது அறிக்கையின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த அறிக்கையை வைத்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories: