பகவல் சிங்கின் வீட்டில் மேலும் பலர் நரபலி சடலங்களை கண்டுபிடிக்க போலீஸ் மோப்ப நாய்கள்: ஒரு எலும்புத் துண்டை கவ்வின

திருவனந்தபுரம்: பகவல் சிங்கின் வீட்டில் மேலும் பலர் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், அவரது வீட்டில் 2 மோப்ப நாய்களின் உதவியுடன் நேற்று பல மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு எலும்பு துண்டு கிடைத்தது. கேரளாவில் தர்மபுரியை சேர்ந்த பத்மா, கேரளாவை சேர்ந்த ரோஸ்லி ஆகிய பெண்கள் துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்த வழக்கில், கைது செய்யப்பட்ட முகமது ஷாபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.  இதில், பல்வேறு முக்கிய  விவரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. நரபலி சம்பவத்தில், கைதானவர்கள் தவிர மேலும் சிலருக்கு தொடர்பு இதில் இருக்கலாம் என்று போலீசார்  நம்புவதால் அவர்கள் யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இதற்காக, கேரளா முழுவதும் குறிப்பாக எர்ணாகுளம், பத்தனம்திட்டா மாவட்டங்களில் கடந்த 5 வருடங்களில் காணாமல் போன பெண்களின் விவரங்களை சேகரிக்கின்றனர். பத்மாவும், ரோஸ்லி உடல் பாகங்கள், பகவல் சிங்கின் வீட்டின் முன்புறமும், பின்புறமும் புதைக்கப்பட்டு இருந்தது. இந்த வீட்டில் மேலும் பலர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிப்பதால், மோப்ப நாய்களான மாயா, மர்பி மூலம் நேற்று துப்பறியப்பட்டது. இவை 40 அடிக்கு கீழ் உடல்கள் இருந்தாலும், அழுகி போயிருந்தாலும் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவை.

அவற்றின் மோப்ப சக்தியால், வீட்டின் பின்புறத்தில் ஒரு மனித எலும்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதை தடயவியல் நிபுணர்கள் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.  அது மனித எலும்பா அல்லது விலங்கின் எலும்பா என்பது பரிசோதனையில் தெரியும். மேலும், மோப்ப நாய்களின் உதவியுடன் மேலும் 6 இடங்களை தோண்டிப் பார்க்க போலீசார் தீர்மானித்துள்ளனர். இன்றும் மோப்ப நாய் சோதனை நடத்தப்பட உள்ளது.

Related Stories: