75 டிஜிட்டல் வங்கிகள் நாடு முழுவதும் திறப்பு

ஸ்ரீநகர்: நாடு முழுவதும் 75 டிஜிட்டல் வங்கிகளை மோடி இன்று தொடங்கி வைக்கிறார். வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணங்களால் உலகமே டிஜிட்டல் மையத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தியாவிலும் டிஜிட்டல் வர்த்தகத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள், புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஏடிஎம்மில் பணம் வந்த காலம் போய், ஏடிஎம்மில் இட்லி வரும் காலத்துக்கு வந்துவிட்டோம். கடந்த 2022-23 ஒன்றிய பட்ஜெட்டில், இந்தியாவின் சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நினைவுகூறும்  வகையில் நாட்டின் பல மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கிகள் அமைக்கப்படும்  என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதற்கான பணி முழு  வீச்சில் நடந்து வருகிறது.

பொதுத்துறையில் 11 வங்கிகளும், தனியார்  துறையில் 12 வங்கிகளும், ஒரு சிறு நிதி வங்கியும் இந்த பணியில் ஈடுபட்டு  வந்தன. இந்த பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில், நாடு முழுவதும் ஜம்மு காஷ்மீரில் 2 வங்கிகள் உட்பட 75  டிஜிட்டல் வங்கிகளை இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த டிஜிட்டல் வங்கிகள் மூலம் சேமிப்புக் கணக்கைத் திறப்பது, கணக்கு இருப்புச் சரிபார்ப்பு, அச்சிடும்  பாஸ்புக், நிதி பரிமாற்றம், நிலையான வைப்பு முதலீடுகள், கடன்  விண்ணப்பங்கள், கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளுக்கான விண்ணப்பம், பில் மற்றும் வரி செலுத்துதல் போன்ற பல்வேறு டிஜிட்டல் வங்கி வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

* இந்தியா முன்னிலைஐஎம்எப் பாராட்டு

சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எப்) ஆசிய பசிபிக் துறையின் துணை இயக்குநர் அன்னர்-மேரி குல்டே-உல்ப் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கொரோனா தொற்று ஊரடங்கு, கட்டுப்பாடுகளில் இருந்து உலக நாடுகள் வெளியே வந்தபோது, டிஜிட்டல் மயமாக்கம் கூடுதல் முக்கியத்துவத்தை பெற்றது. கடந்த 2 ஆண்டுகளாக டிஜிட்டல் மயமாக்கலில் இந்தியா முன்னணியில் உள்ளது. குறிப்பாக, பல புதுமைகளை அறிமுகப்படுத்தி, பல நிர்வாகத் தடைகளை தாண்டி உள்ளது. அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது,’’ என்றார்.

Related Stories: