×

காந்தாரா 2ம் பாகம் எப்போது? சென்னையில் ரிஷப் ஷெட்டி பேட்டி

சென்னை: கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ள படம், ‘காந்தாரா’. ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தின் தமிழ் டப்பிங் நேற்று வெளியானது. இதையொட்டி சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரிஷப் ஷெட்டி கூறியதாவது: இப்படத்தை உருவாக்கும் போது ஓரளவு வெற்றிபெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அனைத்து தரப்பு மக்களும் இப்படத்தைக் கொண்டாடுவார்கள், இவ்வளவு பெரிய வெற்றியைப் பரிசளிப்பார்கள் என்று கனவில் கூட நினைக்கவில்லை. தமிழில் நேற்று வெளியான இப்படத்தைப் பார்த்த பலர் என்னிடம் பேசினார்கள். சிம்பு பூங்கொத்து அனுப்பினார். தனுஷ் டிவிட்டரில் பாராட்டினார். இன்னும் பலரது பாராட்டும், அன்பு கலந்த வார்த்தைகளும் இதுநாள்வரை எங்கள் படக்குழு மேற்கொண்ட சிரமமான பணிகளை இலகுவாக்கி விட்டது. ரசிகர்களின் கைத்தட்டல் எங்கள் கஷ்டங்களை மறக்கச் செய்து இருக்கிறது. இதையடுத்து சிலர், ‘காந்தாரா’ 2ம் பாகம், 3ம் பாகம் குறித்து கேள்வி கேட்கின்றனர்.

என்னால் இப்போது எதுவும் பேச முடியவில்லை. காரணம், இன்னும் நாங்கள் ‘காந்தாரா’ படத்துக்குள் இருந்து வெளியே வரவில்லை. தற்போது நான் என் குடும்பத்துடன் 2 மாதங்கள் கட்டாய ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளேன். அதற்குப் பிறகு புதுப்படம் குறித்து அறிவிப்பேன். அது 2வது பாகமாக இருக்குமா என்பதை கடவுளின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். படம் இயக்கி அதில் ஹீரோ வாக நடிப்பது மிகவும் கஷ்டமாக இல்லையா என்று கேட்கிறார்கள். எனக்கு எந்தவித சிரமமும் இல்லை. இதுதான் கதை என்று முடிவானதும் அதற்கான நடிகர், நடிகைகளை தேடுகிறேன். பிறகு டெக்னீஷியன்களை அமைத்துக்கொள்கிறேன். திட்டமிட்டபடி ஷூட்டிங் நடத்தி முடிக்கிறேன். நான் சினிமாவில் நடிக்க வந்தஒருவன். ஆனால், அப்போது நான் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காததால் படம் இயக்க ஆரம்பித்தேன். 4 படங்கள் வரை இயக்கியுள்ளேன். இந்தப் படங் களின் வெற்றி எனது ரூட்டை மாற்றிவிட்டது.

ஏற்கனவே நான் நடித்த ‘பெல்பாட்டம்’ படத்தின் 2ம் பாகத்தில் நடிப்பது குறித்து ஆலோசித்து வருகிறேன். இப்போது ஓடிடி  தளங்களில் கடைசி 10 நிமிடங்களுக்கு முன்பு வரை வெளியான படங்களைப் பார்த்து, சாதாரண ரசிகர்கள் கூட ஏ டூ இசட் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், எங்களைப் போன்ற இயக்குனர்கள், 2 வருடங்களுக்கு முன்பு உருவாக்கிய கதையை இப்போது கொண்டு வந்து தருகிறோம். அதற்குள் எத்தனையோ விஷயங்கள் மாறியிருக்கும். எனவே, ரசிகர்களுக்கு முன்பு நாங்கள்தான் எங்களை அப்டேட் செய்துகொள்ள வேண்டும். இன்றைய ரசிகர்களுக்கு மொழி ஒரு பிரச்னை கிடையாது. நல்ல கதைகைளைக் கொடுத்தால் ஆதரவுக்கரம் நீட்டத் தயாராக இருக்கிறார்கள். தமிழில் எந்த நடிகரைப் பிடிக்கும் என்று கேட்காதீர்கள். அனைவரது நடிப்பும் எனக்குப் பிடிக்கும். தனுஷுக்கு ஏற்ற கதை என்னிடம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். அவர் ‘காந்தாரா’ படத்தைப் பாராட்டி இருக்கிறார்.

உடனே அவரை வைத்து நான் படம் இயக்கிவிட முடியுமா? அவருக்குஉரிய கதை அமைய வேண் டும். ‘கேஜிஎஃப்’, ‘கேஜிஎஃப் 2’, ‘காந்தாரா’ போன்ற படங் களுக்கு முன்பே கன்னடத்தில் மாபெரும் சாதனைகள் படைத்த ராஜ்குமார், விஷ்ணுவர்தன் ஆகிய லெஜன்டுகள் வெற்றிப் படங்களையும், வித்தியாசமான கதைகொண்ட படங்களையும் வழங்கி இருக்கிறார்கள். அவர்கள் அமைத்துக் கொடுத்த பாதையில் இப்போது நாங்கள் பயணிக்கிறோம். பல வருடங்களுக்கு முன்பே பான் இந்தியா ஸ்டாராக விளங்கியவர் ராஜ்குமார். அவருடைய ‘மகிஷாசுரமர்த்தினி’ என்ற படம், கடந்த 1959ல் பல்வேறு மொழிகளில் சாதனை படைத்தது. இந்திய திரையுலகைப் பொறுத்தவரை, கன்னட படவுலகம் எப்போதுமே சக்சஸ் படங்களை தொடர்ந்து கொடுத்து வந்திருக்கிறது.


Tags : Rishop Shetty ,Chennai , When is Gandhara part 2? Rishabh Shetty interview in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...