இளைஞர்களின் மனதை கெடுப்பதா? ஏக்தா கபூருக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

புதுடெல்லி: சர்ச்சையான வெப்சீரிஸ் மூலம் இளைஞர்களின் மனதைக் கெடுக்கும் வேலையில் பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இறங்கியுள்ளார் என்று, சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் மகள் ஏக்தா கபூர். டிவி தொடர்களை தயாரித்து வந்த இவர், பிறகு படங்களை தயாரித்தார். இப்போது வெப்சீரிஸ்களை ஓடிடி தளத்துக்காக  தயாரிக்கிறார். டிரிபிள் எக்ஸ் என்ற வெப்சீரிஸில் ஆபாச காட்சிகளும், இரட்டை அர்த்த வசனங்களும் அதிகமாக இடம்பெற்றுள்ளன. இந்த வெப்சீரிஸின் 2வது பாகம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள் ளது. இதில் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் பற்றியும், அவர்களது மனைவிகள் பற்றியும் தரக்குறைவான சில காட்சிகளை இடம்பெறச் செய்துள்ளதாக ஏக்தா கபூர் மீது முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இதுகுறித்து விசாரித்த இரண்டு நீதிபதிகள்   அடங்கிய பெஞ்ச், ஏக்தா கபூரின் இந்தச்  செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அந்த  நீதிபதி கள் கருத்து தெரிவித்தபோது, ‘ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளுகிறீர்கள். நீங்கள் (ஏக்தா கபூர்) நாட்டிலுள்ள இளைய தலைமுறையின் மனதைக் கெடுக்கும் வேலையில் இறங்கி உள்ளீர்கள். இன்று ஓடிடியில் எல்லாமே கிடைக்கிறது. நீங்கள் எந்தவிதமான விஷயத்தை மக்களுக்கு கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்? இளைஞர்களின் மனதைக் கெடுக்கும் வேலையைத்தான் செய்துகொண்டு இருக்கிறீர்கள்’ என்று கடும் கோபத்துடன் கூறினர்.தொடர்ந்து ஏக்தா கபூருக்கு ஆதர வாக ஆஜரான வக்கீலிடம், ‘ஒவ்வொரு முறையும் அவருடைய (ஏக்தா கபூர்) இதுபோன்ற வழக்குகளுக்காக நீங்கள் இங்கே வருகிறீர்கள்.

இதை நாங்கள் பாராட்ட முடியாது. இந்த நீதிமன்றம் வலிமையானவர்களுக்கானது அல்ல. குரல் கொடுக்க முடியாத எளியவர்களுக்கானது. நீங்கள் இனி இதுபோன்ற ஒரு மனு கொண்டு வந்தால், அதற்கு நாங்கள் நிச்சயமாக ஒரு விலை வைக்க நேரிடும். இதை தயவுசெய்து உங்களுடைய கிளையன்ட்டிடம் தெரியப்படுத்துங்கள்’ என்றும் கடுமையாக சாடினர். பீகாரில் உள்ள பெகுசராயில் இருக்கும் கீழமை நீதிமன்றத்தில் இதே காரணத்துக்காக ஏக்தா கபூர் மீது தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் அவருக்கு  வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

Related Stories: