ஐசிசி ஆண்கள் உலக கோப்பை டி20 ஆஸ்திரேலியாவில் இன்று தொடக்கம்: முதல் சுற்றில் 8 அணிகள் பலப்பரீட்சை

ஜீலாங்: ஐசிசி ஆண்கள் உலக கோப்பை டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. சூப்பர் 12 சுற்றுக்கு முன்பாக, 8 அணிகள் மோதும் முதல் சுற்று ஆட்டங்கள் 21ம் தேதி வரை நடைபெற உள்ளன. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த தொடர், முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. கடந்த 2007ம் ஆண்டு தொடங்கிய இந்த தொடரில் எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி முதல் சாம்பியனாக முத்திரை பதித்தது. எனினும், அதன் பிறகு நடந்த 6 தொடர்களிலும் இந்திய அணியால் சாதிக்க முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி அதிகபட்சமாக 2 முறை டி20 உலக கோப்பையை முத்தமிட்டுள்ள நிலையில்... பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா தலா ஒரு முறை பட்டம் வென்றுள்ளன.

நடப்பு தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் (பிரிவு 1) மற்றும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்ரிக்கா (பிரிவு 2) ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட உள்ளன. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்வதற்கான முதல் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. இந்த சுற்றுக்கான ஏ பிரிவில் நெதர்லாந்து, இலங்கை, அமீரகம், நமீபியா அணிகளும், பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் ஆட்டங்களின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை அக்.23ம் தேதி மெல்போர்னில் சந்திக்கிறது. அதைத் தொடர்ந்து இந்திய அணி விளையாடும் ஆட்டங்கள் அக். 27, அக். 30, நவ. 2, நவ. 6ல் நடைபெற உள்ளன. 15 ஆண்டுகளாக உலக கோப்பையை மீண்டும் முத்தமிட முடியாமல் தவித்து வரும் இந்திய அணி, இந்த முறை ரோகித் ஷர்மா தலைமையில் சாதிக்குமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. முதல் சுற்றின் தொடக்க நாளான இன்று நடக்கும் ஏ பிரிவு லீக் ஆட்டங்களில் நமீபியா - இலங்கை (தொடக்கம்: காலை 9.30), நெதர்லாந்து - அரபு அமீரகம் (பிற்பகல் 1.30) மோதுகின்றன.

Related Stories: