ஜி-20 மாநாட்டின் போது பிடனுடன் பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை: ரஷ்ய அதிபர் புடின் காட்டம்

அஸ்தானா: ஜி-20 நாட்டு தலைவர்களின் உச்சி மாநாட்டின் போது ஜோ பிடனுடன் பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார். இந்தோனேசியாவின் பாலி தீவில் வரும் நவம்பர் 15 மற்றும் 16ம் தேதிகளில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நடைபெறும் நிலையில், ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதற்கு காரணம், அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் (உக்ரைனுக்கு ஆதரவு), ரஷ்ய அதிபர் புடினும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதால், உக்ரைன் பதற்றத்தை தணிக்க இரு தலைவர்களும் சந்தித்து  பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. ஆனால், இதற்கு அவசியமில்லை என்று ரஷ்ய அதிபர் புடின் தொிவித்துள்ளார். இதுகுறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறுகையில், ‘அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

என்னுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த தயாரா இல்லையா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். என்னை பொருத்தவரை அவரிடம் பேசவேண்டிய தேவை எதுவும் இல்லை. ஜி20 மாநாட்டில் எந்த நாட்டின் தலைவர்களுடனும் தனிப்பட்ட பேச்சுவார்த்தை எதுவும் இல்லை. ஆனால் எங்களின் நட்பு நாட்டு தலைவர்களுடன் பேசுவேன்’ என்றார்.

Related Stories: