பாட்னா: பீகாரில் பாஜகவுடன் கூட்டணி உறவை முறித்துக் கொண்ட முதல்வர் நிதிஷ் குமார், தனது கட்சியான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் சமஸ்திபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ‘நான் உயிருடன் இருக்கும் வரை பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன். ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் பிரிந்துவிட்டன. இப்போது நாங்கள் அனைவரும் (சோசலிஸ்டுகள்) ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகிறோம்.
நாங்கள் பீகாரை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம்; நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம். நாங்கள் (ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம்) மீண்டும் ஒன்றாக சேர்ந்து பயணிப்பது பாஜகவுக்கு பிடிக்கவில்லை. அதனால் எங்கள் மீது அவர்கள் புதிய வழக்குகளை போடுகின்றனர். இவர்கள் (பாஜக) என்ன மாதிரியான வேலையைச் செய்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்போதைய ஒன்றிய அரசு திமிர்பிடித்த அரசாக உள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் அமைச்சர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி காலத்தில் இப்படி இல்லை. அவர்களது காலத்தில் பணியாற்றியது என் நினைவில் என்றும் மகிழ்ச்சியானதாக இருக்கிறது. பீகார் பொறியியல் கல்லூரியை தேசிய தொழில்நுட்ப நிறுவனமாக தரம் உயர்த்தியது அப்போதைய ஒன்றிய கல்வி அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி தான்’ என்று தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.