சனாதன தர்மம், இந்து மதம் குறித்த ஆளுநரின் பேச்சுக்கள் ஆர்.டி.ஐ.யில் வராது: ஆளுநர் மாளிகை விளக்கம்

சென்னை: சனாதனம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருவது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மத்தின் சிறப்புகளை விவரித்து அதனை பின்பற்றுவதே சிறப்பு என அவர் வலியுறுத்தி வருகிறார். இது குறித்து சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி; தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டிருந்தார். அதில் சனாதன தர்மத்தை உருவாக்கியவர் யார்? அதன் கொள்கைகள் என்ன? பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்து என்ற சொல் உள்ளதா? ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி உறுப்பினரா போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.

அமைச்சரவை ஒப்புதல் இன்று பொது நிகழ்ச்சிகளில் பேச அரசியலமைப்பு சட்டத்தில் எந்த விதி அதிகாரம் அளித்தது என்ற கேள்வியும் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்துள்ள ஆளுநர் மாளிகை இந்த கேள்விகள் ஆர்.டி.ஐ. யின் கீழ் வராது எனவும், ஆளுநரின் செயலகத்தில் தகவல்கள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக துரைசாமி கூறியுள்ளார். சனாதனம் குறித்து அதிகம் பேசும் நபராக ஆளுநர் இருப்பதால் அது குறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க சரியான நபர் என குறிப்பிட்ட எஸ்.துரைசாமி 19 கேள்விகளை முன்வைத்து ஆர்.டி.ஐ. மனு அனுப்பியிருந்தார். அதற்கு பதிலளிக்க ஆளுநர் மாளிகை மறுத்துள்ள நிலையில் மாநில தகவல் ஆணையத்தில் துரைசாமி மேல்முறையீடு செய்ய உள்ளார்.

Related Stories: