கேரளாவை உலுக்கிய சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி: பகவல் சிங்கின் வீட்டில் மேலும் பலர் நரபலியா?

திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கிய நரபலி சம்பவத்தில் கைதான போலி மந்திரவாதி முகம்மது ஷாபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் தற்போது போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஷாபி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது. பகவல் சிங்கும், லைலாவும் ஒருவருக்கொருவர் முரண்பாடான விவரங்களை போலீசிடம் கூறி வருகின்றனர். ஆனாலும் போலீசின் தீவிர விசாரணையில் நரபலி தொடர்பான பல்வேறு முக்கிய விவரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தர்மபுரி பெண் உள்பட 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் இவர்கள் மூன்று பேர் தவிர மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் உறுதியாக நம்புகின்றனர். அவர்கள் யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். பத்மா மற்றும் ரோஸ்லி ஆகியோர் தவிர மேலும் பல பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசுக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்து வருகிறது. இதையடுத்து கேரளா முழுவதும் கடந்த 5 வருடங்களில் காணாமல் போன பெண்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

குறிப்பாக எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் காணாமல் போன பெண்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதில் கடந்த 5 வருடங்களில் இந்த இரு மாவட்டங்களில் மட்டும் 26 பெண்கள் காணாமல் போயுள்ளனர். இதுவரை இவர்கள் குறித்த எந்த விவரமும் போலீசுக்கு கிடைக்கவில்லை. இதனால் இவர்களும் நரபலி கொடுக்கப் பட்டிருக்கலாமா என்ற சந்தேகம் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது. பத்மாவும், ரோஸ்லியும் பகவல் சிங்கின் வீட்டில் வைத்து நரபலி கொடுக்கப்பட்டு பின் அந்த வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டனர்.

இவரது வீட்டை ஒட்டி ஏராளமான காலி இடம் உள்ளது. அங்கிருந்து சிறிது தொலைவில் தான் சில வீடுகள் உள்ளன. அந்த வீடுகளிலும் அதிகமாக யாரும் வசிப்பதில்லை. இதனால் பகவல் சிங்கின் வீட்டை ஒட்டி என்ன நடந்தாலும் வேறு யாருக்கும் தெரியாது. மேலும் பலர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பகவல் சிங்கின் வீட்டை ஒட்டியுள்ள இடத்தில் துப்பறியும் நாய்களின் உதவியுடன் போலீசார் தோண்டிப்பார்க்க தீர்மானித்துள்ளனர். இதற்காக ஜேசிபி இயந்திரமும் வரவழைக்கப்பட்டுள்ளது. இன்றே இங்கு தோண்டும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு ஷாபி உள்பட 3 பேரையும் கொண்டு செல்ல போலீசார் தீர்மானித்துள்ளனர். அவர்கள் முன்னிலையில் தோண்டி பரிசோதிக்கப்படும்.

நரபலி காட்சி இணையதளத்தில் வெளியீடு?

பத்மா மற்றும் ரோஸ்லி ஆகிய இருவரும் நரபலி கொடுக்கப்பட்ட காட்சிகளை படம் பிடித்து அதிக பணத்திற்காக இணையதளத்தில் வெளியிட்டிருக்கலாம் என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. டார்க் வெப் என்ற இணையதளத்தில் இது போன்ற காட்சிகள் வெளியாவதாக கூறப்படுகிறது. அந்த இணையதளத்தில் உள்ள ரெட் ரூம் என்ற பகுதியில் கொலைகள், தற்கொலைகள் உட்பட சம்பவங்கள் நேரடியாக ஒளிபரப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த இணையதளத்தில் இருவரது நரபலி காட்சிகளும் வெளியிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால் அது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை அடகு ஆவணம் சிக்கின

ஷாபியின் கொச்சியிலுள்ள வீடு மற்றும் அவர் பணிபுரிந்த ஓட்டலில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டிலிருந்து கொல்லப்பட்ட பத்மா மற்றும் ரோஸ்லியின் நகைகளை அங்குள்ள ஒரு நிதி நிறுவனத்தில் அடகு வைத்ததற்கான ஆவணங்கள் கிடைத்தன. இருவரிடமிருந்தும் கிடைத்த 39 பவுன் நகைகளை ₹1,12,000க்கு ஷாபி அடகு வைத்துள்ளார். அதில் ₹40 ஆயிரம் பணத்தை அவரது மனைவிக்கு கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.

Related Stories: