×

பாலின நிகர் மேம்பாடு ஆய்வகத்திற்கு சிறந்த லோகோ வடிவமைத்து ரூபாய் பத்தாயிரம் பெறலாம்: மேயர் பிரியா அறிவிப்பு

சென்னை: பாலின நிகர் மேம்பாடு ஆய்வகத்திற்கு சிறந்த லோகோ வடிவமைத்து ரூபாய் பத்தாயிரம் பெறலாம் என மேயர் பிரியா அறிவித்துள்ளார். உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படும் “சென்னை மாநகர கூட்டமைப்பு திட்டம்” மற்றும் இந்திய அரசின் “நிர்பயா” திட்டங்களின் கீழ் இந்தியாவிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் தமிழ்நாடு அரசின் மூலம் “பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம்” (Gender and Policy Lab) உருவாக்கப்பட்டு மாண்புமிகு மேயர் அவர்களால் 01.04.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

பாலினநிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகமானது பல துறைகளுடன் ஒருங்கிணைந்து கூட்டு அணுகு முறையின் மூலம் நிர்பயா திட்டத்தினை கண்காணிக்கவும், இதற்கு தேவையான கொள்கைகள் மற்றும் அதற்கான விழிப்புணர்வை உருவாக்கவும், பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்தை பெண்களுக்கு பாதுகாப்பானதாகவும் ஏற்றதாகவும் மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பாலின நிகர் மேம்பாட்டு ஆய்வகத்திற்கு இலச்சினை (Logo) வடிவமைக்கும் பணி பொதுமக்களின் பங்களிப்போடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக இலச்சினை வடிவமைக்கும் போட்டி மாநகராட்சியின் சார்பில் இணையதளத்தின் வழியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இலச்சினை உருவாக்குவதில் அதன் தோற்றம், குறிக்கோள் மற்றும் முயற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கியவையாக இலச்சினை அமைய வேண்டும். இதுகுறித்து ஆர்வமுள்ள நபர்கள் தங்களுடைய சிறந்த திறனை பயன்படுத்தி இலச்சினையை உருவாக்கி மாநகராட்சிக்கு suggestions.gpl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தங்களை படைப்புகளை அனுப்பலாம்.  மேலும், இதுகுறித்த விளக்கங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியில் Quick Links பிரிவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் இலச்சினைகள் தேர்வு குழுவினரால் பார்வையிடப்பட்டு, அதன் அசல் தன்மை, படைப்பாற்றல் தொகுப்பு மற்றும் காட்சியின் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு, சிறந்த இலச்சினை தேர்வு செய்யப்படும். இப்போட்டியானது 07.11.2022 வரை நடைபெறும். இந்தப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த இலச்சினைக்கு ரூ.10,000/- பரிசுத்தொகை வழங்கப்படும் என மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags : Gender Niger Development Laboratory ,Mayor ,Priya , Best logo design for Gender Net Development Lab can get Rs.10,000: Mayor Priya announces
× RELATED ரத்னம் விமர்சனம்