×

புதுகை கான்ட்ராக்டர் வீட்டில் 3 நாள் சோதனை நிறைவு; எடப்பாடிக்கு எதிராக பெட்டி பெட்டியாக ஆவணங்கள் பறிமுதல்: வேனில் எடுத்துச்சென்ற ஐடி அதிகாரிகள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் பாண்டிதுரை(47). அரசு ஒப்பந்ததாரரான இவர் நெடுஞ்சாலை துறையில் சாலைகளில் ஊர் பெயர் பலகை வைத்தல், பிரதி ஒலிப்பான் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இவரது வீடு மற்றும் பிரதான அலுவலகம் பெரியார் நகர் டபுள் ரோட்டில் உள்ளது. இந்நிலையில் ஒப்பந்த பணி எடுத்து செய்ததில் வரி ஏய்ப்பு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதுக்கோட்டையில் உள்ள பாண்டிதுரையின் அலுவலகம் மற்றும் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் கடந்த 12ம் தேதி சோதனை மேற்கொண்டனர். இதில் ₹50 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு, ரூ.2000 கோடிக்கு மேல் சொத்து குவித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையானது நேற்று 3வது நாளாக நீடித்தது.

பாண்டிதுரையிடம் வருமான வரித்துறை அதிகாரிகள், அவரது அலுவலகத்தில் வைத்து நேரடி விசாரணை நடத்தினர். மேலும் வீட்டிற்கு அழைத்து சென்று விசாரித்தனர். காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை 14 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடந்தது. கான்ட்ராக்டர் இவ்வளவு சொத்துகள் வாங்குவதற்கு பணம் எங்கிருந்து வந்தது என அவரது மேலாளரிடமும் அதிகாரிகள் துருவி துருவி விசாரித்தனர். இதில், எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், நெடுஞ்சாலைகளில் ஒளிரும் போர்டுகள் தமிழகம் முழுவதும் அமைக்கும் பணிக்கான டெண்டர் பாண்டித்துரையின் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

ஒரு போர்டு அமைக்க ரூ.300 தேவை என்றால் ஆயிரம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேட்டின் மொத்த பணமும் ஆளுகிறவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட அளவுக்கு கான்ட்ராக்ட் எடுத்த நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலைத்துறையில் அமைச்சர் மற்றும் முதல்வராக இருந்த காலத்தில் பாண்டித்துரையின் நிறுவனத்துக்கு மட்டுமே டெண்டர் வழங்கப்பட்டதால், இந்த நிறுவனம் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றது. இந்த வளர்ச்சியின் மூலம், ஒரு கட்டத்தில் ஒளிரும் ஸ்டிக்கர்களை தயாரிக்கும் நிறுவனத்தையே பாண்டித்துரை தொடங்கினார்.

இதன் மூலம் மாநிலம் முழுவதும் இந்த நிறுவனத்தில் இருந்து ஸ்டிக்கர்கள் தயாரித்து வழங்கப்பட்டது. பாண்டித்துரை ஸ்டிக்கர் தயாரிக்கும் கம்பெனி ஆரம்பித்த பிறகு, போக்குவரத்து துறையில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணிக்கான கான்ட்ராக்ட் பாண்டித்துரைக்கே வழங்கப்பட்டது. இந்த கம்பெனியில் மட்டுமே தனியார் வாகனங்கள் ஸ்டிக்கர் பெற வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டனர். போக்குவரத்து அதிகாரிகளும், பாண்டித்துரையிடம் ஸ்டிக்கர் வாங்கினால் மட்டுமே உரிமம் வழங்கி வந்தனர். இதன் மூலமும் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்தன.

வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து துறையில் நடந்த முறைகேடுகள் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நேற்று இரவு 11 மணிக்கு நிறைவடைந்தது. 4க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளில் ஆவணங்களை எடுத்துக்கொண்டு வேனில் ஏற்றிச்சென்றனர். மேலும் சம்மன் அனுப்பி கான்ட்ராக்டர் பாண்டிதுரையிடம் விசாரணை நடத்தவும் வருமானவரித்துறையினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Tags : Purusha ,Edapadi , 3-day trial completed at Puducherry contractor's house; Box-by-box seizure of documents against Edappadi: IT officers carried in van
× RELATED புருஷாமிருகம்