ஆஸ்திரேலியாவில் 45 நாள் கிரிக்கெட் திருவிழா; 8வது ஐசிசி டி.20 உலக கோப்பை நாளை தொடக்கம்: தகுதி சுற்று முதல் போட்டியில் இலங்கை -நமீபியா மோதல்

சிட்னி: 8வது ஆடவர் ஐசிசி டி.20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்குகிறது. 45 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 16 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மற்ற 4 அணிகள் தகுதி சுற்றில் இருந்து தேர்வாகும். தகுதி சுற்றில் ‘ஏ’ பிரிவில் நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் வெஸ்ட்இண்டீஸ், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே இடம் பெற்றுள்ளன.

இந்த இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் தலா 2 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். தகுதி சுற்று போட்டிகள் நாளை தொடங்குகிறது. முதல் நாளான நாளை 2 போட்டிகள் நடக்கிறது. இந்திய நேரப்படி ஜீலாங்கில் உள்ள கார்டினியா பார்க் மைதானத்தில் நாளை காலை 9.30 மணிக்கு முதல் ஆட்டத்தல் இலங்கை - நமீபியா, தொடர்ந்து 1.30 மணிக்கு நெதர்லாந்து- ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதுகின்றன. சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் ஏ பிரிவில் முதல் இடம், பி பிரிவில் 2ம் இடம்பிடிககும் அணிகள் இடம்பெறும்.

குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்ரிக்கா, வங்கதேசம் மற்றும் தகுதி சுற்றில் பி பிரிவில் முதல் இடம், ஏ பிரிவில் 2வது இடம் பிடிக்கும் அணிகள் இணையும். சூப்பர் 12 சுற்று வரும் 22ம்தேதி தொடங்குகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 23ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் சந்திக்கிறது. சூப்பர் 12 சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். முதல் அரையிறுதி சிட்னியில் நவ.9ம் தேதியும், 2வது அரையிறுதி அடிலெய்டில் 10ம் தேதியும் நடக்கிறது. இறுதிபோட்டி மெல்போர்னில் நவ. 13ம் தேதி நடைபெற உள்ளது.

5 புதிய விதிகள் அமல்

இந்த உலக கோப்பையில் 5 புதிய விதிகள் அமலாகிறது. அவை வருமாறு:

1. பேட்ஸ்மேன்களின் கவனத்தைக் குலைக்கும் வகையில் பந்துவீசும் அணி செயல்பட்டல் நடுவர்கள் மூலம் பேட்டிங் அணிக்கு கூடுதலாக 5 ரன் போனசாக வழங்கப்படும்.

2. 20 ஓவரை வீச ஒரு அணி நீண்ட நேரம் எடுத்துக் கொண்டால் மீதமுள்ள ஓவர்களில் வட்டத்துக்குள் கூடுதலாக ஒரு வீரரை நிறுத்த வேண்டும்.

3. ஒரு பேட்ஸ்மேன் பந்தை ஸ்ட்ரைக் செய்து அந்த பந்தை பந்துவீச்சாளர் பிடித்து பேட்ஸ்மேன் கிரீஸிற்கு வெளியே நகர்ந்து விட்டார் என்பதற்காக ரன் அவுட் செய்யும் நோக்கில் அவரை நோக்கி எறிய கூடாது. அவ்வாறு அவரை நோக்கி எரிந்து ரன் அவுட் செய்தாலும் அது ஏற்கப்படாது.

4. பொதுவாக பவுலர்கள் பந்து வீச முற்படும்போது எதிர்புறத்தில் உள்ள பேட்ஸ்மேன்கள் கிரீஸ் லைனிற்கு வெளியே வந்து ரன் ஓட தயாரானால் அவர்களை பவுலர்கள் கவனித்து ரன் அவுட் செய்யலாம்.

5. ஸ்ட்ரைக்கில் இருக்கும் பேட்ஸ்மேன் பந்தை கேட்ச் கொடுத்து அவுட் ஆனால் புதிதாக களத்தில் வரும் வீரர் தான் ஸ்ட்ரைக் எடுக்கவேண்டும். கிராஸ் ஓவர் செய்திருந்தால் கூட புதிதாக வரும் பேட்ஸ்மேன்தான் ஸ்ட்ரைக் எடுக்க வேண்டும்.

மொத்த பரிசு தொகை ரூ.45 கோடி

போட்டி தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.45 கோடியே 67 லட்சம் ரூபாய் ஆகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.13 கோடி கிடைக்கும். பைனலில் தோற்கும் அணிக்கு ரூ.6.5 கோடியும், அரைஇறுதியில் தோல்வி அடையும் அணிக்கு தலா ரூ.3.26 கோடியும் வழங்கப்படும். இவை தவிர சூப்பர் 12 சுற்றில், ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு தலா ரூ.32 லட்சம் கிடைக்கும். இதேபோன்று முதல் சுற்றில் இருந்து வெளியேறும் அணிக்கு தலா 32 லட்சம் ரூபாய் ஆறுதல் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.

Related Stories: