×

‘பிச்சைக்காரன் வேடத்தில் பிடிபட்டவர்’ தாயை கொன்ற வழக்கில் ரவுடிக்கு ஆயுள் தண்டனை

புதுச்சேரி; புதுச்சேரி கோரிமேடு தட்சிணாமூர்த்தி நகரை சேர்ந்தவர் மரிய சிரஞ்சீவி. இவரது மகன் வெரோன் (44). பிரபல ரவுடியான இவர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதனால் அவர் அடிக்கடி சிறைக்கு சென்று வந்துள்ளார். குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் வெரோனின் குடும்பத்தினர் அவர் மீது கோபத்தில் இருந்துள்ளனர். குறிப்பாக அவரது தாயார் சிரஞ்சீவி, வெரோனிடம் பேசாமலே இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி வெரோன் மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அவரை தாய் சிரஞ்சீவி கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வெரோன், தாயை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிந்து வெரோனை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டில் தமிழக பகுதியில் பதுங்கி இருந்த வெரோனை அதிரடிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், கொலை நடந்தவுடன் தப்பியோடிய வெரோன் சிதம்பரம், சீர்காழி, வடலூர், விருத்தாசலம் போன்ற ஊர்களில் உள்ள கோயில் வாசல்களில் பிச்சைகாரன் போல வேடமிட்டு அமர்ந்து பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்தது தெரியவந்தது.

இவ்வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி செல்வநாதன் வெரோனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.


Tags : Rowdy , Rowdy gets life sentence for murdering mother of 'caught beggar'
× RELATED குண்டர் சட்டத்தில் ரவுடி கைது