×

சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார்

திருவள்ளுர்: திருவள்ளுர் மாவட்டம், நடுக்குத்தகை தனியார் திருமண மண்டபத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில், 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட  மாவட்ட அலுவலர் எஸ்.கே.லலிதா சுதாகர் வரவேற்று பேசினார். மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் டி.தேசிங்கு, திருநின்றவூர் நகராட்சி தலைவர் உஷா ரவி, ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி.சிவக்குமார் எம்.ராம்குமார் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு 200 கர்ப்பிணிகளுக்கு புடவை, வளையல், மஞ்சள், குங்குமம், இனிப்பு, காரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய சீர்வரிசைகளை வழங்கி பேசியதாவது; பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு செயலாற்றி வருகிறார். பெண்களுக்கென தொலைநோக்கு திட்டங்களாக இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஒரு பெண் கருத்தரித்ததிலிருந்து 1000 நாட்கள் வரையிலான பொன்னான கால கட்டம் தான் ஒரு குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. வயிற்றில் வளரும் குழந்தைக்கு கர்ப்பகாலத்தில் தாய் நல்ல சத்தான உணவை உண்டால் தான் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும்.

இந்த 1000 நாட்களில் சீரான வகையில் தாய்ப்பால், உரிய ஊட்டச்சத்து, நல்ல சுகாதார முறைகள், அன்பான அரவணைப்பு ஆகியவற்றை வழங்கினால் குழந்தை முழுமையான வளர்ச்சி பெறும். கர்ப்ப காலத்தில் ஒரு கர்ப்பிணிக்கு சுகாதாரம், ஊட்டசத்து எந்த அளவு முக்கியமோ அந்த அளவு தாயின் மகிழ்ச்சி மிகவும் அவசியம், அதற்கான சூழலையும் கர்ப்பிணிக்கு குடும்பத்தினர் ஏற்படுத்தி தரவேண்டும், அந்த ஒரு வாய்ப்பை இந்த வளைகாப்பு நிகழ்ச்சி அமைத்து தந்துள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார். விழாவில், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.ரமேஷ், மாவட்ட அவை தலைவர் ம.ராஜி, நகர செயலாளர் தி.வை.ரவி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பூந்தமல்லி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஆனந்தம் நன்றி கூறினார். சென்னை குன்றத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா படப்பையில் காஞ்சிபுரம் மாவட்ட குழு தலைவர் படப்பை மனோகரன் தலைமையில் நடைபெற்றது. குன்றத்தூர் ஒன்றியக் குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், ஒன்றியக் குழு துணை தலைவர் உமாமகேஷ்வரி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக செல்வபெருந்தகை எம்எல்ஏ கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். விழாவில் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, வட்டார மருத்துவ அலுவலர் ஜெய்சங்கர், உள்ளாட்சி பிரதிநிதிகள், கர்ப்பிணி பெண்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Minister ,Avadi CM Nasar , Order for 200 pregnant women in community baby shower: Minister Avadi CM Nasar presented
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...