×

மணலிபுதுநகரில் புரட்டாசி மாத 10 நாள்; அய்யா வைகுண்ட தர்மபதி திருவிழா: நாளை தேரோட்டம்

திருவொற்றியூர்: சென்னை மணலிபுதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதி பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம்  10  நாள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு  கடந்த 8ம் தேதி திருநாம கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழாவில், தலைவர் துரைப்பழம், பொருளாளர் ஜெயக்கொடி, சட்ட ஆலோசகர் ஐவென்ஸ், நிர்வாகிகள் சுந்தரேசன், மனுவேல், கிருபாகரன், பாலகிருஷ்ணன், கண்ணன், ராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர். நேற்று 8ம் நாள் விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, சரவிளக்கு பூஜை நடந்தது.

விழாவையொட்டி காலை பணிவிடை - உகப்படிப்பு, மாலை திருஏடு வாசிப்பு நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாண சூருள் மற்றும் பணியாரம் கொழுக்கட்டை, அதிரசம், பூந்தி லட்டு உள்ளிட்ட பலவகையான இனிப்பு பலகாரங்களோடு பக்தர்கள் பதிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை நடந்தது. பெண்கள் சரவிளக்கு முன்பு இனிப்பு பலகாரங்களை வைத்து அய்யாவின் அகண்ட நாமத்தை உச்சரித்தனர். இதையடுத்து திருக்கல்யாண திருவிழா வாசிப்பு நடந்தது. அன்றிரவு அய்யா அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் பதிவலம் வந்தார்.

இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்பு பலகாரம் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான அய்யா வைகுண்ட தர்மபதி திருத்தேர் உற்சவம் நாளை 11.30 மணி அளவில் நடைபெற உள்ளது. தேரோட்டத்தை தெலங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திருத்தேரை வடம்பிடித்து இழுத்து துவக்கி வைக்கிறார். தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், முன்னாள் எம்பி எஸ்.ஆர்.ஜெயதுரை, திருநெல்வேலி எம்பி ஞானதிரவியம், நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் டி.பத்மநாபன், கொட்டிவாக்கம் ஏ.முருகன், பிரைட் சி.முருகன், சி.சந்திரசேகர், சி.அருணாச்சலம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். அன்றிரவு அய்யா பூப்பல்லக்கு வாகனத்தில் பதிவலம் வருதல், திருநாம கொடி அமர்தல் நிகழ்வுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags : Puratasi ,Manaliputhunagar ,Ayya Vaikunda Dharmapati Festival , 10th day of Puratasi month in Manaliputhunagar; Ayya Vaikunda Dharmapati Festival: Chariot tomorrow
× RELATED சிங்கம்புணரியில் எருதுகட்டு விழா