×

முதற்கட்ட பணிகள் தொடங்கியது காவிரி கரையோரம் வெள்ளத்தடுப்பு சுவர்-வீடிழந்த மக்களுக்கு குடியிருப்புகள் கட்டவும் ஏற்பாடு

பள்ளிபாளையம் : பள்ளிபாளையம் காவிரி கரையோரம் வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்கவும், வெள்ளத்தால் வீடிழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடையும் மக்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவும், தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த பள்ளிபாளையம் நகராட்சியில் பெரியார் நகர், ஆவாரங்காடு, சுபாஷ் நகர், ஜனதா நகர், நாட்டாக்கவுண்டம்புதூர், குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகள் காவிரி ஆற்றங்கரையோரத்தில் உள்ளன. மேட்டூர் அணை நிரம்பும் போதெல்லாம் திறந்து விடப்படும் உபரிநீர், இந்த பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகிறது. தண்ணீர் வடியும் வரை, இப்பகுதியில் உள்ள மக்கள், அரசு நிவாரண முகாமில் தங்குவதும், வெள்ளம் வடிந்த பின் வீடுகளுக்கு திரும்புவதுமான நிலையில் அல்லல்பட்டு வருகின்றனர்.

இந்தாண்டில் மட்டும் 3 முறை, காவிரி கரையோர மக்கள் வெளியேறி நிவாரண முகாமில் தங்கி, வீடு திரும்பியுள்ளனர். கர்நாடகாவில் கனமழை பெய்தால், பள்ளிபாளையம் கரையோர மக்களுக்கு, கவலை ஏற்பட்டு விடும். நிவாரண முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு அரசும், கட்சி பிரமுகர்களும் உணவு, மருந்து, உடைகளையும் வழங்கி ஆறுதல் செய்யும் அவலநிலை நீண்டகாலமாக நிகழ்ந்து வருகிறது.

காவிரி கரையோரங்களில் தாழ்வான பகுதியில் வசிப்பவர்களுக்கு மாற்று இடமோ, குடியிருப்போ வழங்க வேண்டும். அதன் பின்னர், நீர் சூழும் பகுதியில் உள்ள குடியிருப்புகள் முற்றிலும் அகற்றுவதுடன், வெள்ளம் புகாத வகையில், காவிரிக்கரையோரம் தடுப்பு சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை, நீண்ட காலமாகவே உள்ளது. ஆனால், கரையோர மக்களின் கவலையை போக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களின் துயரை போக்கும் வகையில், கரையோரம் வெள்ளத்தடுப்பு சுவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று குடியிருப்புகள் என்ற கோரிக்கையை புதிதாக பொறுப்பேற்ற பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவர் மேற்கொண்டுள்ளார். இதற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. விரைந்து செயல்பட்ட தமிழக அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவிரி கரையோரங்களில் உள்ள காலியான குடியிருப்புகளை அகற்றி வருகின்றனர்.

மேலும், ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அளவீடு செய்து, நீர் பாதிப்புள்ள பகுதியில் மக்கள் மீண்டும் ஆக்கிரமிக்காத வகையிலும், காவிரி வெள்ளம் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகாத வகையிலும் தடுப்பு சுவர் அமைக்க திட்டம் தயாரிக்கப்படுகிறது. பள்ளிபாளையம் அக்ரஹாரம் முதல், பெரியார் நகர் வரை சுமார் 1.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்கவும், வெள்ளப்பாதிப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு மாற்று இடமோ, அடுக்குமாடி குடியிருப்போ கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கரையோரங்களில் அளவீடு செய்யப்படும் போது, வெள்ள பாதிப்பில்லாத பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, காவிரி கதவணை திட்டத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு, மாற்று இடம் வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகளை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது நிறைவடைந்ததும், அளவீடு செய்யும் பணி துவங்குமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக நடவடிக்கை  எடுத்த முதல்வருக்கு நன்றி

வெள்ள பாதிப்பிலிருந்து கரையோர மக்களை மீட்கும் வகையில், கடந்த 2 மாதத்துக்கு முன்பு தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையிட்டோம். கடின உழைப்பால் சுயமாக வாழ்ந்து வரும் இம்மக்கள், வெள்ளத்தால் மூட்டை முடிச்சுகளுடன் நிவாரணம் தேடி அலையும் நிலை குறித்து விளக்கப்பட்டது. இதுகுறித்து முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்ற பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், உடனடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.

அரசின் உத்தரவை பெற்றதும், மேட்டூர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தடுப்பு சுவரும், வீடிழந்த மக்களுக்கான குடியிருப்பும் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ள, தமிழக முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் மிகவும் கடமைப்பட்டுள்ளோம் என நகர்மன்ற தலைவர் செல்வராஜ் தெரிவித்தார்.



Tags : Cauvery , Pallipalayam : Pallipalayam to construct a flood barrier along the banks of the Cauvery, flood displaced people will be sheltered in relief camps.
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி