குன்னூர் அருகே அரசு மாதிரி மேல்நிலை உண்டு உறைவிட பள்ளி-வனத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்

ஊட்டி :  குன்னூர் அருகே ஓட்டுபட்டரையில் பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசு மாதிரி மேல்நிலை உண்டு உறைவிட பள்ளியை வனத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.குன்னூர் அருகே ஓட்டுபட்டரை வசம்பள்ளம் பகுதியில் பள்ளிகல்வித்துறை சார்பில் அரசு மாதிரி மேல்நிலை உண்டு உறைவிட பள்ளி திறப்பு விழா நடந்தது. கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தலைமை வகித்து பள்ளியை திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம் போன்றவைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது பள்ளி கல்வித்துறை சார்பில் மாதிரி பள்ளி என்ற புதிய திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அறிவு வேட்கை, சாதி, மத, பாலின வேறுபாடின்றி சமூக பொறுப்புணர்வுள்ள சக மனிதனை நேசிக்கும் குடிமக்களை உருவாக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் மீத்திறன் உள்ள மாணவ, மாணவிகளை தேர்வு செய்து வறுமை சூழலால் எவ்வித தொய்வும் அடைந்திடாத வண்ணம், உண்டு உறைவிட பள்ளி அமைத்து அனைத்து வசதிகளையும் அவர்களுக்கு அளித்து உயர் கல்வியில் சாதித்து சாதனையாளர்களாக உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

இதன்படி நமது மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பயின்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இப்பள்ளியில் சிறப்பு ஆசிரியர்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு நீட், போட்டி தேர்வுகள் போன்ற இதர தேர்விற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் தங்குவதற்கு ஏதுவாக தனித்தனியாக விடுதிகள், உணவு போன்றவைகளும் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இப்பள்ளியில் 45 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு நீட் தேர்வு, ேபாட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு மாணவனின் தனித்துவத்தையும், தனித்திறன்களையும் வளர்த்தெடுத்தல், அவர்கள் விரும்பும் துறையில் உயர்கல்வி வாய்ப்புகளை மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் பெற வழிவகை செய்தல், மாணவர் தம் சுய சிந்தனையை ஊக்குவித்தல், மொழித்திறன் வளர்த்தல் என பன்முகம் கொண்ட பயிற்சி மையமாக இந்த ‘மாதிரி பள்ளி’ அமைந்துள்ளது. இதனை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு எதிர்காலத்தில் மிக உயர்ந்த நிலைக்கு வர வேண்டும், என்றார்.

இந்நிகழ்ச்சியில் குன்னூர் சார் ஆட்சியர் தீபனா விஷ்வேஸ்வாி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தாமோதரன், குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் செல்வகுமார், ஆரம்ப பள்ளி கல்வி அலுவலர் ஜெயக்குமார், தனியார் பள்ளி கல்வி அலுவலர் பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: