×

தோட்ட தொழிலாளர்கள் அச்சம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரியும் யானை கூட்டம்-வனத்துறை நடவடிக்கை எடுக்குமா?

அம்பை : மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் சுற்றித் திரியும் யானை கூட்டத்தால் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாஞ்சோலை. இயற்கை எழில் சூழ்ந்து முழுவதும் தேயிலை தோட்டங்களாக காட்சியளிக்கும் மாஞ்சோலை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ளது.  மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் 4 ஆயிரத்து 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளன. இவற்றில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் தற்போது 1000 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். இவர்கள் அங்கேயே இரவு, பகலாக தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இவ்வாறு குடியிருப்பவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், நெல்லை வந்து செல்ல வேண்டும். இதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் குறிப்பிட்ட நேரங்களில் பஸ் வசதி உள்ளன. இந்த பஸ்சில் மாஞ்சோலை வாசிகள் கீழே வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை 15 நாட்கள், ஒரு மாதம் என கொள்முதல் செய்து செல்வது வழக்கம்.

இயற்கை எழில் கொஞ்சம் வனப்பகுதியான மாஞ்சோலை நெல்லை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. மாஞ்சோலையின் அழகை ரசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதற்கு வனத் துறையின் அனுமதி பெற்றால் மட்டுமே வர முடியும். அது மட்டுமல்லாது சுற்றுலா பயணிகள் காலையில் வந்தால் மாலை 6 மணிக்குள் திரும்பி விட வேண்டும். இரவு தங்க அனுமதி கிடையாது.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளதால் யானை, கரடி, மிளா உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் அவ்வப்போது தேயிலை தோட்டங்களில் சுற்றித் திரிவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் சுமார் 5க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம், கூட்டமாக மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் சுற்றித் திரிந்தது. இதனால் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் தோட்ட தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். யானைக்கூட்டம் தோட்டத்தில் சுற்றித் திரிவதை கண்டு அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. எனவே வனத் துறையினர் நடவடிக்கை எடுத்து யானை கூட்டத்தை காட்டுப்பகுதிக்குள் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தோட்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு.

சாகச பயணம்

மாஞ்சோலைக்கு செல்ல நெல்லை, பாபநாசம், தென்காசி ஆகிய பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் மாஞ்சோலைக்கு செல்லும் பாதை குண்டும், குழியுமான மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மாஞ்சோலைக்கு செல்ல வனத்துறையின் சோதனைச் சாவடியை கடந்தால் மட்டுமே செல்ல முடியும். இந்த சோதனைச் சாவடியில் இருந்து மணிமுத்தாறு அருவிப்பகுதி வரை 6 கி.மீ., தூரத்திற்கு சாலை புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அருவிப்பகுதியில் இருந்து மாஞ்சோலை வரையிலான 8 கி.மீ. தூரத்திற்கு சாலை புதுப்பிக்கப்படாமல் குண்டும், குழியுமான காணப்படுகிறது. இதனால் அரசு பஸ்களில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் சாகச பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே அரசும், வனத்துறையும் நடவடிக்கை எடுத்து மாஞ்சோலை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என தோட்டத் தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Mancholai , AMBAI: Plantation workers are scared by a herd of elephants roaming in the Mancholai tea plantation in the Western Ghats.
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...