திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த 10 போலி டாக்டர்கள் கைது-எஸ்பி தலைமையில் 9 தனிப்படை போலீசார் அதிரடி

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த 10 போலி டாக்டர்களை எஸ்பி தலைமையிலான 9 தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மருந்து கடையில் பணியாற்றும் நபர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் போலி மருத்துவர்களாக கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து திருப்பத்தூர் எஸ்பி பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரின் தலைமையில் 3 டிஎஸ்பிக்கள், 5 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் நேற்று போலி மருத்துவர்கள் பிடிக்கும் வேட்டை நடைபெற்றது.

அப்போது போலீசாருடன், திருப்பத்தூர் மாவட்ட தலைமை மருத்துவமனை டாக்டர்கள் பாஸ்கரன், தண்டபாணி, யோகானந்தம் ஆகியோர் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக ரெய்டு நடத்தினர். அப்போது திருப்பத்தூர் அடுத்த ரங்கநாதவலசை கிராமத்தில் அப்துல்லா(50) என்பவர் தனியாக கிளினிக் வைத்து ஆங்கில மருத்துவம் செய்தது தெரியவந்தது. மேலும் அதே பகுதியில் வேலு(40) என்பவர் மருந்து கடையில் ஆங்கில மருத்துவம் பார்த்து சிகிச்சை அளித்தது தெரியவந்து. அவர்களிடம் இருந்த ஆங்கில மருத்துவ மருந்துகள் மற்றும் ஊசிகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

அதேபோல் திருப்பத்தூர் அடுத்த குருசிலாப்பட்டு கிராமத்தில் வடுகமுத்தம்பட்டி கிராமத்தில் உமா சரஸ்வதி (45), சென்னம்மாள் (40), வாணியம்பாடி அருகே உள்ள திம்மம்பேட்டை கிராமத்தை சேர்ந்த மணி (45), சண்முகசுந்தரம் (34), ஆம்பூர் வீரங்குப்பம் பகுதியை சார்ந்த ஜெயபால் (60), பாலகிருஷ்ணன் (65) உள்ளிட்ட நபர்கள் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்தது தெரியவந்து. அவர்களிடம் இருந்து ஆங்கில மருத்துவ மாத்திரைகள் மருந்துகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து மொத்தம் 10 பேரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து எஸ்பி பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘மனித உயிர்களுடன் போலி மருத்துவர்கள் விளையாடி வருகின்றனர். இதனை தவிர்க்க வேண்டும். மாவட்டத்தில் தொடர்ந்து போலி மருத்துவர்கள் ரெய்டு நடைபெறும். மீண்டும் போலி மருத்துவர்கள் தொடர்ந்து ஆங்கில மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: