×

தீபாவளி வசூல் புகார் எதிரொலி ஓசூர், தர்மபுரி, நாமக்கல், சேலத்தில் அரசு ஆபிசுகளில் விஜிலென்ஸ் ரெய்டு-கணக்கில் வராத பணம் சிக்கியது

தர்மபுரி :  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணம் வசூல் செய்வதாக வந்த புகார்களின் அடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தர்மபுரி, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட அரசு அலுவலகங்களில், நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, கணக்கில் வராத பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பல்வேறு அரசு அலுவலகங்களில் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், ஒரே நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்ட எஸ்பி அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது மேலாளர் அலுவலகத்தில், நேற்று மாலை 5 மணிக்கு, லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவதை அறிந்த அலுவலர்கள், பணத்தை குப்பைக் கூடையில் வீசினர். மேலும், ஜன்னல் வழியாக தூக்கி எறிந்தனர். துணை பொது மேலாளர் அறையில் குப்பை கூடை, ஜன்னல் போன்ற இடங்களில் பணம் வீசப்பட்டு கிடந்ததை கண்டறிந்து, போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் ₹15,500 பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் நேற்று அதிரடி சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், கணக்கில் வராத ₹2.25 லட்சத்தை பறிமுதல்  செய்தனர்.கர்நாடகம் மற்றும் வடமாநிலங்களில்  இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களை சோதனை செய்ய ஜூஜூவாடியில் சோதனைச்  சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியில், வடிவேல் மற்றும் அதிகாரிகள் நேற்று  பணியில் இருந்தனர். இந்நிலையில், சோதனை சாவடியில் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச  ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் சுல்தான் தலைமையில் போலீசார், திடீர் சோதனை  நடத்தினர். அப்போது அவர்களிடமிருந்த கணக்கில் வராத ₹2.25 லட்சத்தை  பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், துறை  ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

அதேபோல், நாமக்கல்லில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்  அலுவலகத்தில், உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு,  ஒப்பந்ததாரர்கள் பரிசு பொருட்கள் கொடுக்க வருவதாக, லஞ்ச ஒழிப்பு  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை 6.30 மணியளவில்,  நாமக்கல் லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி ராமசந்திரன், இன்ஸ்பெக்டர்  நல்லம்மாள் மற்றும் போலீசார், திடீரென நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்கு  வந்தனர். அப்போது, அலுவலகத்தில் கோட்ட பொறியாளர் சந்திரசேகரன் மற்றும்  அலுவலர்கள் இருந்தனர். இதையடுத்து, அலுவலகத்தின் மெயின் கேட்டை  பூட்டி விட்டு, அலுவலர்களை அங்கேயே இருக்க செய்தனர்.

ஒவ்வொரு  அலுவலரின் டேபிள், இருக்கைகள் மற்றும் அலுவலகத்தில் உள்ள அலமாரிகளில் சோதனை  செய்தனர். சோதனையின் போது, அலுவலகத்துக்கு ஒரு அரசு  பள்ளி ஆசிரியர் வந்தார். அவரிடம் விசாரித்த போது, வேறு ஒரு பணிக்காக வந்ததாக தெரிவித்ததால், அவரை அனுப்பி வைத்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின்  சோதனை பற்றி அறிந்ததும், அருகாமையில் இருந்த பொதுப்பணித்துறை மற்றும்  தாலுகா அலுவலக ஊழியர்கள் அவசரம், அவசரமாக அலுவலகத்தில்  இருந்து வெளியேறினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ₹ 8 லட்சம்  கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சேலம்  சூரமங்கலம் சுப்பிரமணிய நகரில்  சேலம் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்  செயல்பட்டு வருகிறது.  விவசாய  நிலங்களை வீட்டுமனைகளாக பிரிக்க அனுமதி  வழங்குவது, அடுக்குமாடி  கட்டிடங்கள் கட்டுவதற்கு இங்குதான் அனுமதி  பெறவேண்டும். இந்த  அலுவலகத்தில், நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை  இன்ஸ்பெக்டர்கள்  நரேந்திரன், ரவிக்குமார் மற்றும் 10க்கும் மேற்பட்ட   ேபாலீசார், அதிரடியாக  உள்ளே புகுந்தனர். அந்நேரத்தில் அலுவலகத்தில்  இருந்தவர்களை வெளியே செல்ல  அனுமதிக்கவில்லை. அங்கிருந்த 3 பேரிடம் விசாரணை  நடத்தினர்.

அலுவலக டிரைவர்  கிருஷ்ணனிடம் இருந்து ₹5,300 பறிமுதல்  செய்யப்பட்டது. சிவில் இன்ஜினியர்  மவுலீஸ்வரனிடம் இருந்து ₹4 ஆயிரம்  மற்றும் வெங்கடேசன் என்பரிவிடம் இருந்து  ₹16ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.  இவர்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம்  வழங்குவதற்காக, இந்த ₹25,300 ரூபாயை கொண்டு  வந்ததாக தெரிவித்தனர்.  இதையடுத்து அங்கிருந்த உதவி இயக்குனர் ராணி மற்றும்  அதிகாரிகளிடம்  போலீசார் தொடர்ந்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

மேலும்  அங்குள்ள  ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.  தர்மபுரியில் இரவு 8.30 மணி வரை சோதனை நடைபெற்றது. இதில், பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், யார் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

இதுதவிர, தமிழகத்தில் கோவை, திருப்பூர், விருதுநகர், திருச்சி, மதுரை, கரூர் உள்ளிட்ட 27 இடங்களில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ₹1.12 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Hosur ,Dharmapuri ,Namakkal ,Salem ,Diwali , Dharmapuri: Based on the complaints of collecting money on the occasion of Diwali festival, Hosur, Dharmapuri, Krishnagiri district.
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...