×

ஸ்டான்லி டாக்டர்கள் அலட்சியத்தால் வாலிபரின் வலதுகால் கட்டை விரல் துண்டிப்பா?வீடியோ வைரலால் பரபரப்பு

தண்டையார்பேட்டை: ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர்களின் அலட்சியத்தால், வாலிபரின் கால் கட்டை விரல் துண்டிக்கப்பட்டதாக டிவிட்டரில் பரவும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (25). இவர், கடந்த 7ம்தேதி சாலை விபத்தில் கால் விரல் நசுங்கியதால், சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எலும்பு முறிவு பிரிவில் அனுமதிக்கப்பட்ட யோகேஸ்வரனுருக்கு வலது கால் கட்டை விரல் துண்டிக்கப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தது. இதையடுத்து, பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர் ஆலோசனைபடி யோகேஸ்வரனுக்கு தையல் போடப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சிகிச்சை அளிக்கப்பட்டு 2 நாட்கள் கழித்து யோகேஸ்வரனின் விரல்களில் ரத்த ஓட்டம் இல்லாததால் விரல் கருப்பு நிறமாக மாற தொடங்கி செப்டிக் ஆகி உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டதால், மருத்துவர்கள், யோகேஸ்வரனின் வலது கால் கட்டை விரலை அறுவை சிகிச்சை செய்து துண்டித்து எடுத்துள்ளனர். இந்நிலையில், யோகேஸ்வரனின் உறவினர்கள் டிவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளனர். இதில், ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர்கள் யோகேஸ்வரனுக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் தான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது. டாக்டர்கள் அலட்சியமாக செயல்பட்டதால் யோகேஸ்வரனின் கால் விரல் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறவேண்டிய நிலை உள்ளது என பதிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து, மருத்துவமனை டீன் பாலாஜியிடம் கேட்டால் சரியான விளக்கம் தராமல் சென்றுவிடுகிறார். செல்போனில் தொடர்பு கொண்டு பேசினாலும் போனை எடுப்பதில்லை என ஸ்டான்லி மருத்துவமனை டீன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.  எனவே, இந்த பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்று இனி தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Stanley , Stanley doctors negligent amputate teenager's right big toe? Video viral sensation
× RELATED நகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி