×

வீட்டுமனை பட்டா கேட்டு தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில், வீட்டுமனை பட்டா வழங்ககோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருவொற்றியூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான கிராம நத்தம் நிலத்தில் குடியேறி, நீண்ட காலமாக 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக மாவட்ட கலெக்டர், தாசில்தார் என பல்வேறு தரப்பினரிடம் வலியுறுத்தி வந்தனர். எனினும், அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. அதன்பிறகு, திருவொற்றியூர் நகராட்சியாக இருந்தபோது, இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இப்போது அந்த பட்டா செல்லாது என அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்களுக்கு நிரந்தர வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி நேற்று காலை சமூக ஆர்வலர் தொண்டன் சுப்பிரமணி தலைமையில், 100க்கும் மேற்பட்ட மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாநகராட்சி சார்பில் அரசுக்கு சொந்தமான கிராம நத்தம் நிலத்தில் வசிக்கும் தங்களுக்கு நிரந்தரமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், தாசில்தார் அலுவலகத்தில் சுற்றித்திரியும் இடைத்தரகர்களை அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

தகவலறிந்ததும் திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் நிரந்தர இலவச வீட்டுமனை பட்டா குறித்த கோரிக்கைகளை தாசில்தாரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என போலீசார் உறுதியளித்தனர். இதை ஏற்று, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் பரபரப்பு நிலவியது.


Tags : Tahsildar , Public protest at Tahsildar office demanding housing lease
× RELATED நச்சுக்காற்றால் பொதுமக்கள் பாதிப்பு;...