கல்விதான் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேச்சு

பெரம்பூர்: கல்விதான் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறினார். தமிழகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்திய எழுத்தறிவு திட்டத்தின் கீழ், அறிவியல் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு பள்ளிகளுக்கான அறிவியல் உபகரணங்களை வழங்கினார்.பின்னர், அவர் பேசியதாவது: கல்வி மட்டுமே சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

சமமான வளர்ச்சி வேண்டும் என்பதற்காகவே ஆதிதிராவிட பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து அது செயல்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் நல துறையின் சார்பில் 1326க்கும் மேற்பட்ட காப்பகங்கள் செயல்படுத்தப்பட்டு அதில் மாணவ, மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இன்றைய, காலகட்டத்தில் தொழில்நுட்பத்தை தேவையான விஷயங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும். அதனை தேவையில்லாத மற்ற விஷயங்களில் பயன்படுத்தும்போது நமக்கு பிரச்னை ஏற்படுகிறது. அதனை உணர்ந்து மாணவ, மாணவிகள் செயல்பட வேண்டும். கல்வி கற்கும் காலகட்டத்தில் அவர்களுக்கான வாய்ப்புகளை மாணவ, மாணவியர் முறையாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். கல்வி, ஒழுக்கம், இவை இரண்டுடன் துணிச்சல் இருந்தால் மாணவிகள் எந்த ஒரு உயரத்தையும் எளிதில் எட்டலாம். மாணவர்கள் படிக்கும் காலகட்டத்தில் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் முழு மரியாதை செலுத்த வேண்டும்.

அப்போதுதான், கல்வி கற்கும் காலம் முதல் அவர்களுக்கு ஒழுக்கம் என்பது ஏற்பட்டு அது வாழ்க்கையில் படிப்படியாக அவர்களுக்கு வளர்ச்சியை தரும். தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களை மாணவ, மாணவிகள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி 72வது மாமன்ற உறுப்பினர் சரவணன், திருவிக நகர் எம்எல்ஏ தாயகம்கவி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் ஆனந்த், வெரைசான்  இந்தியா அமைப்பின் மனிதவள மேலாளர் கோபிநாத் புல்லை காரி, செயல் மற்றும் திட்ட இயக்குனர் அஸ்வின் லஷ்மணன், அரசு துறை அதிகாரிகள்,  நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: