×

பெங்களூருவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்; சென்னை-பெங்களூரு-மைசூர் இடையே நவ.10 முதல் வந்தே பாரத் ரயில் சேவை: முதன்முறையாக தென் இந்தியாவில் அறிமுகம்

சென்னை: சென்னை-பெங்களூரு இடையே நவம்பர் 10ம்  தேதி  முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பெங்களூருவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சமீபகாலமாக நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் என்பது பேசு பொருளாகி வருகிறது. தொடங்கப்பட்டு சில நாட்களில் தொடர்ந்து விபத்துகள் என வந்தே பாரத் ரயில் இப்படி நாடு முழுவதும் அறிமுகமாகி உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை வந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 2022-23ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்தார். இதை தொடர்ந்து சென்னை ஐசிஎப்பில் வந்தே பாரத் ரயிலை உருவாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ரயிலை உருவாக்க சுமார் ரூ.90 கோடி முதல் 120 கோடி வரை செலவு செய்யப்படுகிறது. வந்தே பாரத் ரயில் என்பது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதல் மூலம் இயக்கப்படும் ரயிலாகும்.

இந்திய ரயில்வேயின் எதிர்கால ரயில்கள் இதுபோன்றவையாகத்தான் இருக்கும். வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் ரயிலாக வந்தேபாரத் இருக்கும். ட்ரெயின் 18 ரயில் வடிவமைக்கப்பட்டபோது, ரயில்வே ஓட்டுநர் இல்லாமல் இயங்கக்கூடியதாகவும், சுய உந்துதல் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் வந்தே பாரத் ரயில் உருவாக்கப்பட்டது. இதுவரை வந்தே பாரத் ரயில் 4 வழித்தடத்தில் செல்கிறது, அதன்படி, டெல்லி-வாரணாசி, டெல்லி-மாதா வைஷ்ணவ்தேவி கத்ரா, காந்தி நகர்-மும்பை மற்றும் இமாச்சல்-உனா ஆகிய வழித்தடத்தில் செல்கிறது. தற்போது, சென்னை ஐசிஎப்பில் மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் உருவாக்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. குறிப்பாக, சென்னை ஐசிஎப்பில் வரும் 2023 மார்ச் 31ம் தேதிக்குள் 27 வந்தே பாரத் ரயிலை உருவாக்கி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் வந்தே பாரத் ரயில் கேட்கப்பட்டது. இதற்கு ஒப்புதலும் கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் 5வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்  ரயில், முதன்முறையாக தென் இந்தியாவில் சென்னை - பெங்களூரு - மைசூரு  வழித்தடத்தில் அடுத்த மாதம் 10ம் தேதி அறிமுகம் செய்யப்படுவதாக ரயில்வே  அமைச்சக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை மைசூரு எம்பி பிரதாப் சிம்ஹா உறுதி  செய்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி  வைஷ்ணவுக்கும் அவர் டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 10ம்  தேதி, பெங்களூருவில் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2ம் முனையத்தை  திறந்து வைக்க பெங்களூரு வரும் மோடி, சென்னை-மைசூரு இடையேயான வந்தே பாரத்  ரயிலையும் கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த வழித்தடத்தின் தொலைவு  483 கிமீ. வந்தே பாரத் ரயில் மூலம் இந்த வழித்தடத்தின் பயண நேரம் 4 மணி  நேரமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் சட்டப்பேரவை  தேர்தல் நடக்க உள்ள குஜராத், இமாச்சல் மாநிலங்களில் 3வது மற்றும் 4வது  வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கர்நாடகாவில் அடுத்த ஆண்டு  தேர்தல் நடக்க உள்ள நிலையில் 5வது ரயில் பெங்களூருவில் இருந்து அறிமுகம்  செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.         

* எவ்வாறு இயங்குகிறது?
வந்தே பாரத் ரயில் என்பது செல்ப் ப்ரோபல் இன்ஜின் (self propelled) தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. ஒவ்வொரு பெட்டியிலும் இன்ஜின் இருப்பதால் தாமாகவே உந்தித்தள்ளும். வழக்கமான ரயிலில் இன்ஜினானது ரயில் பெட்டி உள்ளே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் வந்தே பாரத் ரயில இன்ஜினானது ரயில் பெட்டி கீழ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

* உருவாக்கும் விதம்
ஐசிஎப்பில் வந்தே பாரத் முழு ரயிலை உருவாக்க 12 பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, 1. இரு பக்கமும் தடுப்பு அமைப்பது, 2. மேல் பக்கம் தடுப்பு, 3. கீழ் பக்கம் தடுப்பு, 4. தரை பகுதி அமைப்பது, 5. மேற்கூரை அமைப்பது, 6. உள்பக்கம் சீர் செய்வது, 7. ஜன்னல் அமைப்பது, 8. மின்சார வசதி அமைப்பது, 9. கழிவறை அமைப்பது, 10. சக்கரம் அமைப்பது, 11. கருவிகள் அமைப்பது, 12. இருக்கை அமைக்கப்பட்டு இறுதி செய்யப்படுகிறது.

* வசதிகள்
எதிர்கால தலைமுறையினருக்கான ரயில் வந்தே பாரத் என்பதால் அதிநவீன வசதிகள் இதில் அடங்கியுள்ளன. குறிப்பாக வைபையுடன் கூடிய பொழுதுபோக்கு வசதி, ஜிபிஎஸ் அடிப்படையிலான பயணிகள் தகவல் மையம், அதாவது ரயில் எந்த இடத்தில் செல்கிறது என்பதை துல்லியமாக அறியமுடியும். கண்காணிப்பு கேமரா, அனைத்துப் பெட்டிகளிலும் தானியங்கி கதவுகள், சுழலும் இருக்கைகள், விமானத்தில் இருப்பது போன்று பயோ-வேக்கும் கழிவறைகள், இரண்டு சீட்டிற்கு நடுப்பகுதியில் சார்ஜிங் பாய்ண்ட், மினி சமையலறை என பல்வேறு வசதிகள் உள்ளன.

Tags : Modi ,Bangalore ,Bharat ,Chennai ,Mysore , PM Modi inaugurates in Bengaluru; Chennai-Bengaluru-Mysore Vande Bharat Train Service from Nov 10: First in South India
× RELATED நெல்லைக்கு புல்லட் ரயில் இயக்க...