இரட்டைக் குழந்தை பெற்ற விவகாரத்தில் விக்கி - நயன்தாராவிடம் நேரில் விசாரிக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: விக்கி -நயன்தாரா தம்பதியினர் இரட்டைக் குழந்தை பெற்ற விவகாரத்தில், குழந்தைகள் பிறந்த மருத்துவமனை  கண்டறியப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் விக்கி-நயன்தாரா  இருவரும் நேரில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் குடும்ப நல பயிற்சி மையத்தில் நடந்த மாற்றுப்பாலினத்தோரின் உடல், மன ஆரோக்கியம் குறித்த கருத்தரங்கில்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். திருநங்கைகளின் வாழ்வியல் சூழலுக்கு உதவி செய்த மருத்துவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

திருநங்கைகள் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதில் தேசிய மருத்துவ ஆணையம் சில விளக்கங்கள் கேட்டு, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதுகுறித்து மருத்துவத்துறை வல்லுநர்கள், மருத்துவர்கள் போன்ற குழுவினருடன் ஆலோசித்தும், திருநங்கைகள் அமைப்பினருடன் இணைந்து தேசிய மருத்துவ ஆணையத்திற்கு விளக்கம் அளிக்கப்படும். நடிகை நயன்தாரா, விக்னேஷ் எந்த மருத்துவமனையை அணுகி இரட்டை குழந்தை பிறந்தது என்பதை மருத்துவத்துறை கண்டறிந்துள்ளது. இதுதொடர்பாக, சுகாதாரத்துறை இணை  இயக்குனர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை  நடந்து வருகிறது.

சட்ட விதிகளுக்கு உட்பட்டு இரட்டை குழந்தைகளை பெற்றார்களா, விதிமீறல்களில் ஈடுபட்டு உள்ளார்களா  என்பதை கண்டறிந்து, ஒரு வார காலத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும். வாடகை தாய் விவகாரத்தில், நடிகை நயன்தாரா, விக்னேஷ் இருவரும் தேவைப்பட்டால் நேரில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவததை தடுப்பதற்கு அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: