×

கோயிலுக்கு எதிரில் மதுக்கடை செட் நாக சைதன்யா ஷூட்டிங் நிறுத்தம்

பெங்களூரு: கோயிலுக்கு எதிரில் மதுபானக் கடை செட் போட்டதால் நாக சைதன்யா படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கிரித்தி ஷெட்டி, பிரியாமணி, பிரேம்ஜி நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இந்த படம் தெலுங்கு, தமிழ் மொழிகளில் உருவாகிறது. இந்த படத்துக்காக கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், மேலுகோட் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோயிலுக்கு அருகில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த கோயிலுக்கு எதிரில் படக்குழுவினர் மதுக்கடை செட் ஒன்றை அமைத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் கோயிலுக்கு அருகில் விதிகளை மீறி செட் அமைந்துள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

படக்குழுவினரை, அப்பகுதியினர் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்தனர். அப்போது, செட் போட்டு படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கப்பட்டது. ஆனால் அது மதுக்கடை செட் என்பதை படக்குழு சொல்லவில்லை என்பது தெரிந்தது. இதையடுத்து அந்த செட் அப்புறப்படுத்தப்பட்டது. கதைப்படி கோயிலுக்கு அருகில் மதுக்கடை இருப்பது போல் காட்சி வருகிறது. அதனால்தான் இங்கு படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். இனி இந்த காட்சியை ஸ்டுடியோவில் கோயில் செட் போட்டு, அத்துடன் மதுக்கடை செட்டும் போட்டு படமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Naga Chaitanya , Naga Chaitanya shooting stop is set opposite the temple
× RELATED மீனவ பெண்ணாக நடிக்க சாய் பல்லவிக்கு பயிற்சி