×

கன்னடத்தில் நடிக்கிறார் மோகன்லால்

பெங்களூரு: கன்னட படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால். மலையாள சினிமாவில் முக்கிய ஸ்டாரான மோகன்லால், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் உன்னைப் போல் ஒருவன் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்தார். ஜில்லா படத்தில் விஜய்யுடன் நடித்தார். தெலுங்கில் ஜனதா கேரேஜ் படத்தில் ஜூனியர் என்டிஆருடன் நடித்திருந்தார். இந்தியில் அஜய் தேவ்கனுடன் கம்பெனி படத்தில் நடித்தார். கன்னடத்தில் 2004ம் ஆண்டு வெளிவந்த லவ் படத்தில் முக்கிய வேடம் ஏற்றார். இதையடுத்து 2015ல் புனித் ராஜ்குமாருடன் சேர்ந்து மைத்ரி என்ற கன்னட படத்தில் மோகன்லால் நடித்தார். இப்போது 7 வருடம் கழித்து மீண்டும் கன்னட படத்தில் மோகன்லால் நடிக்கிறார்.

பிரேம் இயக்கும் இந்த படத்தில் துருவ் சார்ஜா ஹீரோவாக நடிக்கிறார். இவர் நடிகர் அர்ஜுனின் உறவினர். இந்த படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. வரும் 20ம் தேதி பெங்களூருவில் இந்த படத்தின் துவக்க விழா நடைபெற உள்ளது. இதில் மோகன்லால் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் பிரேம் கூறும்போது, ‘எந்த விதமான உணர்வுகளில் இருக்கிறேன் என்பதை விவரிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் சாரின் ஆதரவு எங்களைப் போன்றவர்களை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லும்’ என நெகிழ்ந்து டிவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். மோகன்லாலுடன் இருக்கும் புகைப்படத்தையும் அதில் வெளியிட்டுள்ளார்.


Tags : Mohanlal , Mohanlal is acting in Kannada
× RELATED சிவராத்திரியில் கண்ணப்பா பர்ஸ்ட் லுக் ரிலீஸ்