பணம், செல்போன் கேட்டு மிரட்டல் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு கத்தி குத்து

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பணம் கேட்டு மிரட்டி இந்திய மாணவர் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவை சேர்ந்தவர் சுபம் கர்க். ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக் கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப் பிரிவில் முனைவர் பட்டம் பயின்று வருகிறார். இவர் கடந்த 6ம் தேதி இரவு, சிட்னி நகரின் பசிபிக் ஹைவே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரிடம் பணம், செல்போனை கேட்டு ஒருவர் மிரட்டினார். அவற்றை சுபம் மறுத்தார். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர், சுபத்தை திடீரென கத்தியால் சரமாரியாக குத்தினார். முகம், நெஞ்சு, வயிற்று பகுதியில் கத்திக்குத்து விழுந்தது.  

இதில், சுபம் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுபத்தை  தாக்கியவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் பெயர் டேனியல் நோர்வுட் (27). சுபத்தை காண்பதற்காக அவருடைய குடும்பத்தை சேர்ந்த ஒருவரை  உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பும் முயற்சியில் டெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் ஈடுபட்டுள்ளது.

Related Stories: