×

இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் 500 கிராமிய கலைஞர்களுக்கு தலா ரூ.10,000 நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் 500 கிராமியக் கலைஞர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு சங்கீத நாடக மன்றம் என்ற அமைப்பு தமிழக பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்க தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என கலைஞரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கலை நிகழ்ச்சிகளில் வாய்ப்புகள் வழங்கி இளம் கலைஞர்களை ஊக்குவித்தல், அயல்நாடுகளில் தமிழகக் கலைகளைப் பரப்புதல், கலைச்சேவை புரிந்த கலைஞர்களுக்கு மாநில அளவில் கலைமாமணி விருது வழங்குதல், அரிய கலை வடிவங்களை ஆவணப்படுத்துதல், அரிய கலை நூல்களைப் பதிப்பித்திட நிதியுதவி வழங்குதல், நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்குதல், மறைந்த புகழ்பெற்ற கலைஞர்களின் குடும்பங்களுக்கு குடும்ப பராமரிப்பு நிதியுதவி வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை இயல், இசை, நாடக வளர்ச்சிக்காக செயல்படுத்தி
வருகிறது.

அந்த வகையில், வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களில், 9 கலைமாமணி விருதாளர்களான கோவை நடராஜன், சாந்தி கணேஷ், பிரேம்குமார், கருமுத்து தியாகராசன், பிரசாத் ராஜேந்திரன், லெட்சுமி, கணேசன், வேலவன் சங்கீதா, ராஜநிதி ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொற்கிழித் தொகையாக தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கலைஞர்கள் பயன்பெறும் வகையில், 500 கிராமிய கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் ஆடை, அணிகலன்கள் வாங்கிட தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50 லட்சத்திற்கான காசோலைகளை நிதியுதவியாக வழங்கிடும் அடையாளமாக, 10 கிராமியக் கலைஞர்களுக்கு நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தொழில்கள், தமிழ்  ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,  தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், தலைமைச்  செயலாளர் இறையன்பு, அறநிலையத் துறை செயலாளர் சந்தர மோகன், தமிழ்நாடு இயல்,  இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் விஜயா தாயன்பன், கலை பண்பாட்டுத்துறை  இயக்குநர் காந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Iyal Music and Theater Council ,Chief Minister ,M.K.Stalin , Rs.10,000 each to 500 village artistes on behalf of Iyal Music and Theater Council: Chief Minister M.K.Stalin
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்