×

சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தலை நடத்த விதிக்கப்பட்ட தடை நீக்கம்: ஏற்கனவே உள்ள விதிகளின்படி நடத்த ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கனவே உள்ள சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மிகவும் பழமையான சங்கங்களில் ஒன்றாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளது. 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த சங்கத்தில் சுமார் 17,000 வழக்கறிஞர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்த சங்கத்திற்கான நிர்வாகிகள் தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் தலைவராக ஜி.மோகனகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.  

இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு அடுத்த தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்தியபால் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், விதிகளை மீறி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் எனவே தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற அப்போதைய நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு, தேர்தலுக்கு தடை விதித்தது. மேலும் தேர்தலில் போட்டியிடுவதற்கு புதிய தகுதிகளையும் அறிவித்தது. அதன்படி 5 ஆண்டுகளில் 200 வழக்குகளை  நடத்தியவர்கள் தான் போட்டிட தகுதியானவர்கள் என்பது உள்ளிட்ட விதிகளை உருவாக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  இந்த உத்தரவை சீராய்வு  செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், வழக்கறிஞர் சத்யபால், சங்க செயலாளர் கிருஷ்ணகுமார், நூலகர் ஜி. ராஜேஷ் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் நேற்று  நீதிபதி மகாதேவன்,  முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அதில், வழக்கறிஞர்கள் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. ஏற்கனவே இருந்த சங்கங்களின் சட்ட விதிகள்படி தேர்தலை நடத்தலாம். விரைவில் தேர்தலை நடத்துவதற்கு தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். தேர்தலை நடத்தும் அதிகாரிகளாக மூத்த வழக்கறிஞர் எம்.கே.கபீர், வழக்கறிஞர்கள் சி.டி.மோகன், வி.ஸ்ரீகாந்த், எஸ்.தேவிகா, எஸ்.சிவசண்முகம், சி.கே.சந்திரசேகர், சி.ராஜா குமார் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். தேர்தலை 90 நாட்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும். ஒரு வாக்காளருக்கு ஒரு சங்க தேர்தலில் மட்டுமே வாக்கு என்ற விதியை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Tags : Madras ICourt Advocates Association ,ICourt , Removal of ban imposed on holding election of Madras iCourt Advocates Association: ICourt order to conduct as per existing rules
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...