×

அந்தியூரில் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது: சாலைகள் துண்டிப்பு

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகள் துண்டிக்கப்பட்டன. கனமழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணை மற்றும் அந்தியூர் பெரிய ஏரி, கெட்டிச் சமுத்திரம் ஏரி, எண்ணமங்கலம் ஏரி, கரும்பாறைபள்ளம் ஏரி, தண்ணீர் பள்ளம் ஏரி, வேம்பத்தி ஏரி, பிரம்மதேசம் ஏரி ஆகிய 7 ஏரிகளும் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி ஆப்பக்கூடல் ஏரிக்கு செல்கிறது. இந்த ஏரியும் நிரம்பி உள்ளதால் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு சென்று கொண்டிருக்கிறது.

அந்தியூரிலிருந்து ஆதிரெட்டியூர் வழியாக வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டிக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. போலீசார், போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர். அந்தியூரிலுள்ள பெரியார் நகரில் பெரிய ஏரி தண்ணீர், வீதிகளில் புகுந்தது. அம்மாபேட்டை- பவானி செல்லும் அண்ணாமடுவு ரவுண்டானா பகுதியில் சாலையை கடந்து தண்ணீர் சென்றது. இதனால், காலை 11 மணியிலிருந்து 3 மணி வரை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கடந்த 2  நாட்களாக அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையினால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.


Tags : Anthiur , Heavy rain in Anthiur leaves houses flooded: roads cut off
× RELATED பவானி, அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு...