சிறுத்தை மர்ம சாவு விவகாரம் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பியிடம் விசாரிக்க அனுமதி வழங்கக்கோரி கடிதம்: மக்களவை சபாநாயகருக்கு அனுப்ப வனத்துறை திட்டம்

தேனி: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பிக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை மர்மமாக இறந்த சம்பவம் தொடர்பாக, அவரிடம் விசாரணை நடத்த மக்களவை சபாநாயகரிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்ப உள்ளதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சொர்க்கம் கோம்பை பகுதியில் தேனி எம்பியும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இவரது தோட்டத்தை  சுற்றி அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலியில், கடந்த செப்.28ம் தேதி ஒரு ஆண் சிறுத்தை சிக்கி உயிரிழந்தது. இதனை வனத்துறையினர்  பிரேத பரிசோதனை செய்து அங்கேயே உடலை எரித்து அழித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தேனி வனத்துறையினர், எம்பி தோட்டத்திற்குள் ஆட்டுக்கிடை அமைத்து அங்கேயே தங்கியிருந்த ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தே.கரிசல்குளத்தை சேர்ந்த தொழிலாளரான அலெக்ஸ்பாண்டியன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். எம்பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தோட்டத்தில் மேலாளர்களாக பணிபுரிந்து வந்த தங்கவேல், ராஜவேல் ஆகியோரை வனப்பாதுகாப்புச் சட்டம், 1972, பிரிவு 5ன் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

காட்டுமாடு, மான் உள்ளிட்ட வன விலங்குகள் தனியார் தோட்டங்களில் இறந்தால், அந்த தோட்ட உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதுவழக்கம். இந்த நிலையில் நேற்று தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன், பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் உள்ளிட்டோர் தேனி மாவட்ட வனஅலுவலர் சமத்தாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, சிறுத்தை மர்மமாக இறந்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கதமிழ்ச்செல்வன் கேட்டுக் கொண்டார்.

இதற்கு, பதிலளித்த மாவட்ட வன அலுவலர் சமத்தா, ‘‘சிறுத்தை இறந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற விபரம் நேற்றுத்தான் (நேற்று முன்தினம்) வருவாய்த்துறை மூலம் கிடைத்தது. இந்த தோட்டம் தேனி எம்பி ரவீந்திரநாத் மற்றும் மேலும் 2 பேருக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது. எனவே, தேனி எம்பியிடம் விசாரணை நடத்த மக்களவை சபாநாயகரிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்ப உள்ளோம். அனுமதி கிடைத்ததும், ரவீந்திரநாத் எம்பிக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தப்பட உள்ளது. மற்ற 2 உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்கக் கோரி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: