ரயில் முன் தள்ளி படுகொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை தற்கொலை: மகள் இறந்த அதிர்ச்சியில் விஷம் குடித்தார்; கொடூர காதலன் கைது ; பரபரப்பு வாக்குமூலம்; கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: ரயில் முன் தள்ளி படுகொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை, மகள் இறந்த துக்கத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவியை படுகொலை செய்த கொடூர காதலன் கைது செய்யப்பட்டான். ‘என்னை உதாசீனப்படுத்தியதால் கொன்றேன்’ என அவன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளான். இந்த கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மாணிக்கம் (47). கால் டாக்சி டிரைவரான இவருக்கு, ராமலட்சுமி (43) என்ற மனைவியும், சத்யா(20), தரணி(16), செல்வி(3) என மூன்று மகள்களும் உள்ளனர்.

மனைவி ராமலட்சுமி ஆதம்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். மூத்த மகள் சத்யா, தி.நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் கல்லூரிக்கு மின்சார ரயிலில் சென்று வருவது வழக்கம். அதே போன்று நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு தனது தோழியுடன் வந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர், சத்யாவிடம் பேசினார். திடீரென வாக்குவாதம் செய்தார். அப்போது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி ரயில் வந்தது. உடனே வாலிபரிடம் பேசிய சத்யா தனது தோழியுடன் ரயிலில் ஏற வந்தார்.

உடனே அந்த வாலிபர் சத்யாவை பின்னால் இருந்து எட்டி உதைத்தார், இதில் நிலை தடுமாறி சத்யா ரயில் முன்பு தண்டவாளத்தில் விழுந்ததில் தலை வேறு உடல் வேறு என இரு துண்டாக ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், ரயில்வே ஏடிஜிபி வனிதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீசார் குற்றவாளியை பிடிக்க ரயில்வே டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்தனர். இதுதவிர பரங்கிமலை துணை கமிஷனர் பிரதீப் உத்தரவுப்படி 3 தனிப்படைகள் என மொத்தம் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் குற்றவாளி பயன்படுத்திய செல்போன் சிக்னல் உதவியுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு துரைப்பாக்கம் அருகே குற்றவாளியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் நடத்திய விசாரணையின் போது அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: ஆலந்தூர் காவலர் குடியிருப்பு அருகே உள்ள ராஜா தெருவை சேர்ந்த தயாளன் என்பவரின் மகன் சதீஷ்(24). தந்தை தயாளன், பரங்கிமலை காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணியாற்றி 2014ம் ஆண்டு ஓய்வு பெற்றார். எனக்கு சரியாக படிப்பு வரவில்லை. இதனால் 8ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டேன். பிறகு விமான நிலையத்தில் சரக்கு கையாளும் பிரிவில் சிறிது காலம் வேலை செய்தேன். நண்பர்களுடன் சேர்ந்து துணி வியாபாரம் செய்தேன். கொரோனா காலத்தில் எனது தொழில் இழப்பு ஏற்பட்டது. இதனால் தற்போது நான் வேலை இல்லாமல் இருந்து வருகிறேன்.

 எனது தந்தை தயாளன், தற்போது செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தந்தையின் ஓய்வூதிய பணத்தில் தான் நான் சுற்றி வருகிறேன். எனது தந்தை பரங்கிமலை காவல் நிலையத்தில் வேலை செய்த போது, ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் தான் நாங்கள் வசித்தோம். அப்போது எங்கள் வீட்டின் எதிரே தான் சத்யா வசித்து வந்தார். நாங்கள் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக பழகி வந்தோம். எனது தந்தை ஓய்வு பெற்றதால் நாங்கள் காவலர் குடியிருப்பில் இருந்து அருகே உள்ள ராஜா தெருவில் குடியேறினோம். அதன் பிறகு தான் சத்யா மீது எனக்கு ஈர்ப்பு வந்தது.

அவரது சிரிப்பு மற்றும் இயல்பான பேச்சால் என்னை அறியாமல் நான் சத்யாவை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். அவர் பள்ளி முடிந்து டியூஷன் செல்லும் போது பின் தொடர்ந்து அவரிடம் பேசுவேன். அவரும் என்னிடம் பேசி வந்தார். கடந்த 5 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வருகிறேன். பல்வேறு கட்ட முயற்சிக்கு பிறகு, சத்யா எனது காதலை ஏற்றுக்கொண்டார். ஆனால் அவரது பெற்றோரை கண்டு பயந்தார். சத்யா பள்ளி படிப்பு முடித்து தி.நகரில் உள்ள கல்லூரியில் சேர்ந்த பிறகு தான், நாங்கள் இருவரும் காதலிக்கும் விஷயம் வெளியில் தெரிய ஆரம்பித்தது. இது சத்யாவின் தாய் ராமலட்சுமிக்கு பிடிக்கவில்லை.

என்னை பலமுறை நேரில் அழைத்து கண்டித்துள்ளார். எனது தந்தையிடமும் கூறி கண்டித்துள்ளார். என்னால் சத்யாவை அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியவில்லை. அவளும் எனது அன்பை புரிந்து கொண்டாள். நாங்கள் இருவரும் எங்கள் பெற்றோருக்கு தெரியாமல் பல இடங்களுக்கு சென்று சுற்றி வந்துள்ளோம். அவள் கல்லூரி நேரத்தில் மட்டும் தான் என்னுடன் வெளியே வருவாள். மற்றபடி அவளை நான் பார்க்க முடியாது. நாங்கள் இருவரும் ஒன்றாக சுற்றுவதை அவரது தாய் மாமன் ஒரு நாள் பார்த்துவிட்டார். இதனால் எங்கள் காதல் விவகாரம் பூதகரமாக மாறியது. சத்யாவின் செல்போனை அவர்கள் வாங்கி வைத்து கொண்டனர்.

கல்லூரிக்கும் சில நாட்கள் அனுப்பவில்லை. அப்படியே அவர் கல்லூரிக்கு சென்றாலும் அவளுடன் உறவினர்கள் யாராவது ஒருவர் வருவார்கள். இதனால் விரக்தி அடைந்த நான், கல்லூரிக்கு சென்று அவளுடன் பேச முயற்சி செய்தேன். ஆனால் அவள் அவரது பெற்றோர் கூறிய படி என்னை விட்டு விலக ஆரம்பித்தார். ‘எனக்கும் உனக்கும் சரி வராது...... என்னை விட்டுவிடு’ என்று கூறினாள். இதனால் ஆத்திரமடைந்த நான் கல்லூரியிலேயே சத்யாவை அடித்தேன். இதனால் அவர்கள் மாம்பலம் காவல் நிலையத்தில் என் மீது புகார் அளித்தனர். அந்த புகாரின் படி என்னை போலீசார் அழைத்து பேசி, ‘இனி சத்யாவை பார்க்க மாட்டேன்’ என்று கூறி கடிதம் எழுதி வாங்கி கொண்டனர்.

இதற்கிடையே சத்யாவுக்கு அவசர அவசரமாக திருமணம் செய்ய அவரது ெபற்றோர் முடிவு செய்தனர். நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்ல தனது தோழியுடன் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வருவதாக நண்பர்கள் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு போய் சத்யா முன்பு நின்றேன். ஆனால் அவள் என்னை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டார். இது எனக்கு மிகவும் வருதமாக இருந்தது. பிறகு நான் சத்யாவிடம் அவரது திருமணம் குறித்து கேட்டேன். அதற்கு அவர், நான் என் பெற்றோர் சொல்லும் மாப்பிள்ளையை தான் திருமணம் செய்யவேன். இனி என்னை தொந்தரவு செய்யாதே என்று கூறிவிட்டார். எனது காதலை புரிந்து கொள்ளாமல் உதாசினப்படுத்தினார்.

அந்த நேரம் ரயில் நிலையத்திற்குள் ரயில் வந்தது. உடனே சத்யா அவரது தோழியுடன் ரயில் ஏற சென்றார். அப்போது, நான் ஆத்திரத்தில், ‘எனக்கு கிடைக்காத நீ ..... இனி யாருக்கும் கிடைக்க கூடாது’ என்று சத்யாவை எட்டி உதைத்தேன். அவர் நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். அப்போது ரயில் அவர் மீது ஏறியது. உடனே நான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்’’. இவ்வாறு சதீஷ் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். மகள் மீதான பாசத்தால் உயிரை மாய்த்த தந்தை: இதற்கிடையே மகள் இறந்த தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சத்யாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

சத்யா வீட்டின் முன்பு ஏராளமானோர் திரண்டனர். விடியவிடிய சத்யாவின் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தந்தை மாணிக்கம் மகள் சத்யா மீது அளவு கடந்த பாசம் கொண்டவர். வேலை முடிந்து தினமும் வீட்டிற்கு வரும் போது, சத்யாவுக்கு பிடித்த திண்பண்டங்கள் வாங்கி வருவார். மகள் இறந்த துக்கம் தாங்காமல் ேநற்று முன்தினம் இரவு யாருக்கும் தெரியாமல் தனது காரில் அமர்ந்து வெகு நேரம் தனியாக அழுது கொண்டிருந்தார். பிறகு வீட்டின் அருகே உள்ள மதுபானக்கடைக்கு சென்ற மாணிக்கம் மதுவாங்கி அதில், ‘மயில் துத்தம்’ (காப்பர் சல்பேட்) கலந்து குடித்துள்ளார்.

பிறகு யாருக்கும் அதை சொல்லாமல், நேற்று அதிகாலை வரை வீட்டில் மகள் மீதான பாசத்தில் அழுது கொண்டிருந்தார். பிறகு மாணிக்கத்தை வீட்டில் உள்ளவர்கள் தேடியுள்ளனர். அப்போது காரில் மாணிக்கம் மயக்க நிலையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் டாக்டர்கள் பரிந்துரைப்படி சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மாணிக்கத்தை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர். இதனால் பதற்றம் அதிகமானது. உறவினர்கள் கதறி அழுதனர்.

சவக்கிடங்கில் மகள் உடல் அருகே மாணிக்கம் உடலும் வைக்கப்பட்டது. கணவர் இறந்துவிட்டார் என்ற தகவலை உறவினர்கள் யாரும் மனைவி ராமலட்சுமியிடம் கூறவில்லை. கணவர் மருத்துவமனையில் இருப்பதாக கூறியுள்ளனர்.

பின்னர் சத்யா உடலை நேற்று காலை வீடியோ பதிவுடன் டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அதேபோல், அவரது தந்தை மாணிக்கம் உடலும் பிரேத பரிசோனை செய்யப்பட்டது. இரண்டு உடல்களும் பரிசோதனை முடிந்து 2.30 மணிக்கு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைதொடர்ந்து, ஆம்புலன்சில் சத்யா மற்றும் அவரது தந்தை மாணிக்கம் உடல் ஏற்றப்பட்டு வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.

முதலில் சத்யாவின் உடல் வீட்டின் முன்பு இறக்கி ைவக்கப்பட்டது. அதை பார்த்து தாய் ராமலட்சுமி கதறி அழுதார். அடுத்த சில நொடிகளில் கணவர் மாணிக்கம் உடல் சத்யா உடல் அருகே வைத்த போது தான் கணவர் இறந்த விபரம் ராமலட்சுமிக்கு தெரியவந்தது. உடனே ராமலட்சுமி விண்ணை முட்டும் அளவுக்கு அலறி துடித்தார். ‘ அய்யோ... என் மகளுடன் என் சாமியும் போயிட்டாரே.... நான் இனி என்ன செய்வேன். 2 பெண் குழந்தைகளை வைத்து நான் இனி என்ன செய்வேன்.... கேன்சர் நோயால் நானும் போயிவிடுவேனே.... அதன் பிறகு மகள்களை யார் பார்ப்பார்கள்’  என்று கூறி துடித்தார். அப்போது அருகில் இருந்த பொதுமக்கள், காவலர்கள் அனைவரும் செய்வது அறியாமல் கண்கலங்கி நின்றனர்.

பின்னர் சத்யா மற்றும் மாணிக்கம் உடலுக்கு பொதுமக்கள், காவல்துறையினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு வீட்டில் இருந்து 2 உடல்களும் தனித்தனி வாகனங்களில் ஏற்றப்பட்டு ஆலந்தூர் கண்ணன் காலனியில் உள்ள மின்தகன எரிமேடைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு சடங்குகள் முடிந்து முதலில் மாணிக்கம் உடல் எரியூட்டப்பட்டது. அதன் பிறகு மகள் சத்யா உடல் எரியூட்டப்பட்டது. காவலர் குடும்பத்தில் மகள், தந்தை என இருவரும் ஒரே நாளில் இறந்த சம்பவம் போலீசார் வட்டாரத்திலும், சென்னையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு ஆலந்தூர் ரயில்வே போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

* வரும் 28ம் தேதி வரை சிறையில்

கல்லூரி மாணவி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட காதலன் சதீஷ் ரயில்வே போலீசார் பலத்த பாதுகாப்புடன் சைதாப்பேட்டை 9 வது நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகனம்பாள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் விசாரணைக்கு பிறகு குற்றவாளியை வரும் 28ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதைதொடர்ந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் குற்றவாளியை நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

* ‘குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர சட்ட உதவிகள்’

சத்யாவின் தாய் ராமலட்சமி ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார், ராமலட்சுமியின் தந்தை முத்துவும் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதேபோல் ராமலட்சுமி தங்கை காஞ்சனா லஞ்ச ஒழிப்புத் துறையிலும், சகோதரர் சீனிவாசன் எழும்பூர் காவல் நிலையத்திலும், சீனிவாசன் மனைவி வீரலட்சுமி ஆதம்பாக்கம் காவல் நிலையத்திலும் தலைமை காவலராகவும் பணியாற்றி வருகின்றனர். குடும்பமே மாநகர காவல்துறையில் பணியாற்றி வருவதால் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று காலை 11 மணிக்கு ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் உயிரிழந்த சத்யாவின் வீட்டிற்கு நேரில் சென்றார்.

பிறகு தலைமை காவலர் ராமலட்சுமியிடம் சிறிது நேரம் ஆறுதல் கூறினார். அப்போது, ராமலட்சுமி எனது மகள் இறப்புக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் அய்யா... அதற்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என்று கதறி அழுதார். உடனே கமிஷனர், காவலர் குடும்பத்தை சேர்ந்த உங்களுக்கு கட்டாயம் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறுகையில், கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளிவிட்டவன் ஒரு ‘சைகோ’. குற்றவாளிக்கு உரிய தண்டனையை விரைவில் பெற்று தர, மாநகர காவல்துறை அனைத்து சட்ட உதவிகளும் செய்யும் என்றார்.

* குற்றவாளியை தாக்க முயன்ற பொதுமக்கள்

மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காதலன் சதீஷை போலீசார் வேனில் பலத்த பாதுகாப்புடன் சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்திற்குள் அழைத்து வந்தனர். அப்போது நீதிமன்ற வளாகத்திற்குள் செல்ல வேனில் இருந்து போலீசார் சதீஷை அழைத்து வரும்போது, திடீரென பொதுமக்கள் சிலர் சதீஷ் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். ஆனால் போலீசார் துரிதமாக செயல்பட்டு அவர்களிடம் இருந்து காப்பாற்றி நீதிமன்ற வளாகத்திற்குள் அழைத்து சென்றனர்.

* மாணவியின் தாய்க்கு சிகிச்சை

பரங்கிமலை ரயில் நிலைய தண்டவாளத்தில் தள்ளிவிட்டதில் ரயில் மோதி இறந்த கல்லூரி மாணவி சத்யாவின் வீட்டிற்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் சென்று சத்யா குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார். அப்போது, இறந்து போன சத்யாவின் தாய் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் போலீஸ் கமிஷனரிடம் தெரிவித்து, அதற்கான மருத்துவ உதவி கோரினர். ஏற்கனவே, சென்னை காவல்துறையைச் சேர்ந்த 5 போலீசாருக்கு புற்றுநோய்க்கான இலவச சிகிச்சை அளித்து வரும், மருத்துவர் அனிதா ரமேஷ் மற்றும் மருத்துவ குழுவினர் மூலம், சத்யாவின் தாய்க்கு சவீதா மருத்துவமனையில், இலவச சிறப்பு மார்பக புற்றுநோய் சிகிச்சை அளிக்க காவல் கரங்கள் அமைப்பின் மூலம் உதவி செய்ய கமிஷனர் சங்கர் ஜிவால் ஏற்பாடு செய்துள்ளார்.

Related Stories: