×

இந்தியாவின் பொக்கிஷத்திற்கு பாக்., ஈரான், ஆப்கான் உரிமை கோருவதால் ‘கோஹினூர் வைரம்’ கிரீட பாரம்பரியம் முடிவுக்கு வருகிறது!: முடிசூட்டு விழாவில் சார்லஸின் மனைவிக்கு ‘கவுரவம்’ கிடைக்காது

லண்டன்: எலிசபெத் மறைவுக்கு பின்னர் இந்தியாவின் பொக்கிஷமாக கருதப்படும் கோஹினூர் வைரத்திற்கு பாகிஸ்தான், ஈரான், ஆப்கான் ஆகிய நாடுகள் உரிமை கோருவதால், அரசியல் சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. அதனால் அடுத்தாண்டு நடக்கும் முடிசூட்டு விழாவில் சார்லஸின் மனைவிக்கு வைர கிரீட கவுரவம் கிடைக்காது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்தில் நீண்ட காலமாக ஆட்சி செய்த இரண்டாம் எலிசபெத் மகாராணி, தனது 96வது வயதில் சமீபத்தில் காலமானார். அவரது மறைவையடுத்து, அந்நாட்டு மூன்றாம் மன்னராக அவரது மகனான சார்லஸ் முறைப்படி அறிவிக்கப்பட்டார். மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்தாண்டு மே 6ம் தேதி நடைபெறும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

அடுத்த மன்னர் யார்? என்பது உறுதி செய்யப்பட்டாலும், ராணி எலிசபெத்தின் விலைமதிப்பற்ற கோஹினூர் வைரம் பதித்த கிரீடம், சார்லசின் இரண்டாவது மனைவி கமிலா பார்க்கர் பவுல்ஸைதான் அணிய உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனை வரலாற்றை பொறுத்தவரை, கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை பெரும்பாலும் அரசிகளே அணிந்துள்ளனர்.

இந்த கோஹினூர் வைரமானது இந்தியாவின் ஆந்திர மாநில சுரங்கத்தில் 14ம் நூற்றாண்டில் வெட்டியெடுக்கப்பட்டது. தற்போது உலகிலேயே மிகப்பெரிய வைரமாக (105.6 கேரட்) கோஹினூர் வைரம் உள்ளது. அதன் மதிப்பு 200 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. இந்த வைரத்தை மாலிக் கஃபூர் (அலாவுதீன் கில்ஜியின் ஜெனரல்) கொள்ளையடித்தார் என்றும், அதன்பின் முகலாயப் பேரரசின் பல ஆட்சியாளர்களுக்கு அனுப்பப்பட்ட பிறகு, சீக்கிய மகாராஜா ரஞ்சித் சிங் லாகூரில் அதை வைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. மகாராஜா ரஞ்சித் சிங்கின் மகன் திலீப் சிங் ஆட்சியின் போது 1849ல் விக்டோரியா மகாராணிக்கு வைரம் பரிசாக வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவின் பொக்கிஷமாக கருதப்படும் கோஹினூர் வைரத்தை இங்கிலாந்திடம் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். ஆனால், கோஹினூர் வைரத்தை திரும்ப ஒப்படைக்க முடியாது (லாகூர் ஒப்பந்தத்தின்படி) இங்கிலாந்து அரசு திட்டவட்டமாக கூறியது. எலிசபெத் ராணி இறப்புக்கு பின்னர் இந்த வைரத்திற்கு இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசுகள் உரிமை கோரி வருகின்றன. பல்வேறு தரப்பிலும் சர்ச்சைகள் கிளம்பி உள்ளதால், மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில், கமிலாவால் கோஹினூர் வைர கிரீடத்தை அணிய முடியாமல் போகலாம் என்கின்றனர்.

இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வட்டாரங்கள் கூறியதாக பிரபல நாளேடு வெளியிட்ட செய்தியில், ‘அரச குடும்பங்களிடம் விசாரித்த ேபாது, கோஹினூர் வைரத்திற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உரிமை கோரி வருவதால், அடுத்த ஆண்டு நடக்கும் விழாவில் ராணியாக முடிசூட்டும் கமிலாவுக்கு கோஹினூர் வைர கிரீடத்தை அணிவிப்பதில் அரசியல் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதற்கு மாறாக பிளாட்டினம் மவுண்டில் வடிவமைக்கப்பட்ட அந்த கிரீடத்தில் இருந்து கோஹினூர் வைரம் அகற்றப்படலாம்;
அல்லது வைர கிரீடத்தை அணிவதை தவிர்க்கப்படலாம். கோஹினூர் வைரத்தை ராணிக்கு மீண்டும் அணிவிப்பதால், அவை காலனித்துவ ஆட்சியின் கடந்த கால வலிமிகுந்த நினைவுகளை மீண்டும் கொண்டுவருகிறது என்று பலரும் கூறி வருகின்றனர். எனவே ராணியாக முடிசூட்டும் கமிலாவுக்கு இந்தியாவின் கோஹினூர் வைர கிரீடம் கவுரவம் கிடைப்பது சந்தேகம்’ என்று அந்த நாளேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Tags : India ,Iran ,Afghan ,Charles , 'Kohinoor Diamond' crowning tradition ends as Pakistan, Iran, Afghanistan claim India's treasure!: Charles's wife will not get 'honour' at coronation
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...