சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 7 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 26 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 10.5 கிலோ கிராம் கஞ்சா, ரொக்கம் ரூ.450 மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 07 முதல் 13 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 26 குற்றவாளிகள் கைது. 10.5 கிலோ கிராம் கஞ்சா, ரொக்கம் ரூ.450 மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் குறிப்பிடும்படியாக, F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 07.10.2022 அன்று நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, சுதந்திர தின பூங்கா அருகில் கண்காணித்த போது, அங்கு ஒரு நபர் கஞ்சா மற்றும் கத்திகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் மேற்படி சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த முகமது ரபி (எ) மிட்டாய் ரவி, வ/22, த/பெ.முகமது சலீம், P பிளாக், பஷ்பா நகர், நுங்கம்பாக்கம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3.5 கிலோ கஞ்சா மற்றும் 5 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. R-7 கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 09 அன்று கே.கே.நகர், 10வது செக்டார், 63வது தெருவிலுள்ள வீட்டில் கண்காணித்த போது, அங்கு சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்த்து, கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் மேற்படி வீட்டில் கஞ்சா செடி வளர்த்த 1.அபிஷேக், வ/21, த/பெ.சார்லஸ், 63வது தெரு, 10வது செக்டார், கே.கே.நகர், இவரது மாமா மகன் 2.சதீஷ், வ/19, த/பெ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரை கைது செய்தனர். மேற்படி வீட்டில் இருந்து 2 கஞ்சா செடிகள் மற்றும் 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல, B-3 கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 11.10.2022 அன்று மதியம், கோட்டை, அன்னை சத்யாநகர், C பிளாக், பெட்டிக்கடை அருகில், கண்காணித்தபோது, 2 பெண்கள் உட்பட 3 நபர்கள் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே, காவல் குழுவினரை அவர்களை பிடிக்க சென்றபோது, 2 நபர்கள் தப்பியோடவே, ஒரு பெண் மட்டும் பிடிபட்டார்.
அதன்பேரில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த கனகா, பெ/வ.38, க/பெ.சுரேஷ், எண்.333, C பிளாக், அன்னை சத்யா நகர், கோட்டை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர், தீவிர விசாரணை மற்றும் தனிக்கவனம் செலுத்தி கடந்த 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் இதுவரை, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 622 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,423 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு இதுவரையில் மொத்தம் 772 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
இதில் காவல் குழுவினரின் தீவிர பணிகளால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 51 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
