×

3 சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகம்; உம்ரான் மாலிக்கை அணியில் சேர்த்திருக்கவேண்டும்: முன்னாள் பயிற்சியாளர் பாரத் அருண் பேட்டி

மும்பை: 7வது ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உள்பட 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய 8 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ள நிலையில் மற்ற 4 அணிகள் தகுதி சுற்றில் இருந்து தேர்வு செய்யப்படும். சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 சுற்றில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை வரும் 23ம் தேதி எதிர்கொள்ள உள்ளது.

இதனிடையே இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, முதுகு காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனால் பின்னடைவாக அமைந்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக மாற்று வீரர் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் டி.20 உலக கோப்பையில் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: டி20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மூன்று சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் அணியில் இருந்திருக்க வேண்டும். உம்ரான் மாலிக் இளம் வீரர். நல்ல வேகத்தில் பந்துவீசுகிறார். ஐபிஎல்லில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்.

ஆஸி. மைதானங்களில் பவுன்ஸ் இருக்கும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆஸ்திரேலியாவில் மிக முக்கிய பங்கு உண்டு. ஆனால் மூன்று ஸ்பின்னர்கள் அதிகம் என்று நினைக்கிறேன். ஏனெனில் எந்த ஒரு கட்டத்திலும் அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே இடம்பெற முடியும். தேவைப்பட்டால் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்யலாம், என்றார்.

Tags : Umran Malik ,Bharat Arun , 3 more spinners; Umran Malik should have been included in the team: Former coach Bharat Arun interview
× RELATED டி.20 உலகக்கோப்பை அணியில் ஷமிக்கு பதிலாக உம்ரான்மாலிக்?.. பிசிசிஐ ஆலோசனை