×

கேரளாவில் நரபலி நடந்த வீட்டிற்கு வந்த சினிமா நட்சத்திரங்களை விசாரிக்க போலீஸ் முடிவு: 2 பள்ளி மாணவிகள் சீரழிக்கப்பட்டதும் அம்பலம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வீட்டிற்கு வந்த மலையாள சினிமா நட்சத்திரங்களை கண்டுபிடித்து அவர்களையும் விசாரிக்க போலீசார் முடிவு செய்து இருக்கின்றனர். இதற்கிடையே நாட்டுவைத்தியரின் வீட்டில் வைத்து 2 மாணவிகள் பலாத்காரம் செய்யபட்டதும் அம்பலமாகி உள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் தர்மபுரியை சேர்ந்த பத்மா, ஆலப்புழாவை சேர்ந்த ரோஸ்லி ஆகியோர் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மந்திரவாதி முகம்மது ஷாபி, பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரை 12 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

அதன்படி 3 பேரையும் போலீசார் தங்களது கஸ்டடியில் வைத்து உள்ளனர். அவர்கள் 3 பேரும் சேர்ந்து மேலும் பல பெண்களையும் நரபலி கொடுத்து இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இது குறித்து அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரித்து வருகின்றனர். இதில் ஷாபி போலீஸ் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்க மறுப்பதாக தெரிகிறது.

இதற்கிடையே பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியர் பகவல் சிங்கின் வீட்டில் 2 பள்ளி மாணவிகளும் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்து இருக்கிறது. இந்த மாணவிகள் கொச்சியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். அவர்கள் 2 பேரையும் ஒரு வாலிபர் தான் பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்து சென்று உள்ளார். அங்கு மாணவிகளை ஷாபி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

தற்போது மாணவிகள் கொச்சியில் உள்ள விடுதியில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்து உள்ளனர். இந்த விசாரணையில் பலாத்காரத்திற்கு பிறகு ஷாபி 2 பேரையும் அனுப்பி வைத்தாரா? அல்லது நரபலி குறித்த விவரங்களை தெரிந்து கொண்டு 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றார்களா? என்பது குறித்த விவரங்கள் தெரியவரும்.

மாணவிகளும் நரபலி கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே ஷாபி பயன்படுத்தி வந்த பேஸ்புக்கில் பல முக்கிய விவரங்கள் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து அவரது பேஸ்புக்கில் உள்ள விவரங்களை போலீசார் பரிசோதித்து வருகின்றனர்.

ஷாபி பேஸ்புக் உள்பட சமூக வலைதளங்கள் மூலம் தான் பலருக்கும் வலை விரித்து உள்ளார். வெறும் 6ம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ள ஷாபியால் சமூக வலைதளங்களை எப்படி சுலபமாக பயன்படுத்த முடிகிறது என்பது போலீசுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவருக்கு வேறு யாராவது உதவியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசுக்கு ஏற்பட்டு உள்ளது. இது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. நரபலி நடைபெறுவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரை ஷாபி கோட்டயம், கொச்சி உள்பட பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்து உள்ளார். எதற்காக அங்கு சென்றார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

சினிமா நட்சத்திரங்கள் யார்?: நாட்டு வைத்தியரான பகவல் சிங் தனது வீட்டில் வைத்தும், முக்கிய நபர்களுக்கு அவர்களது வீடுகளுக்கு சென்றும் சிகிச்சை அளித்து வந்து உள்ளார். ஆகவே தினமும் ஏராளமானோர் அவரிடம் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அதன்படி மலையாள சினிமாவை சேர்ந்த சில நடிகர்களும் பகவல் சிங் வீட்டிற்கு சிகிச்சைக்காக வந்து உள்ளதாக விசாரணையில் தெரியவந்து இருக்கிறது.

இருப்பினும் சினிமா நட்சத்திரங்கள் யார்? யார்? என்ற விவரங்களை போலீசார் சேகரிக்க தொடங்கி உள்ளனர். அவர்களிடமும் விரைவில் போலீசார் விசாரணை நடத்த தீர்மானித்து உள்ளனர். இந்த விசாரணையில் மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுர்வேத சிகிச்சை என்ற பெயரில்...
பகவல் சிங்கின் வீடு பத்தனம்திட்டா மாவட்டம் இலந்தூர் என்ற கிராமத்தில் மிகவும் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் உள்ளது. சற்று தொலைவில் ஒருசில வீடுகள் இருந்தாலும் அவை காலியாகவே உள்ளன. இதனால் அவரது வீட்டில் என்ன நடந்தாலும் வெளியே யாருக்கும் தெரியாது. பகவல் சிங் தனது வீட்டில் வைத்துத் தான் ஆயுர்வேத சிகிச்சையும், மசாஜும் நடத்தி வந்துள்ளார்.
எனவே இதற்காக தினமும் ஏராளமானோர் வாகனங்களில் வந்து சென்று உள்ளனர். இங்கு வருபவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வருவதாகவே அந்த பகுதியினர் இதுவரை கருதினர். ஆனால் பகவல் சிங் ஆயுர்வேத சிகிச்சையுடன் பாலியல் தொழிலும் நடத்தி வந்தது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஷாபி தான் விபச்சாரத்திற்காக பல்வேறு இடங்களிலிருந்தும் பெண்களை அழைத்து வந்துள்ளார். இங்கு சினிமா நடிகர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்களும் வந்து சென்றுள்ளனர்.

பத்மாவின் தங்கை பேட்டி: நரபலி கொடுக்கப்பட்ட பத்மாவின் தங்கை பழனியம்மாளும் கொச்சியில் தான் வசித்து வருகிறார். இன்று அவர் கூறியதாவது: எனது அக்கா பத்மா மிகவும் தைரியசாலி. அவரை யாரும் அவ்வளவு எளிதில் பயமுறுத்த முடியாது. அவர் காணாமல் போன செப்டம்பர் 26ம் தேதி என்னை பார்க்க வீட்டுக்கு வந்து உள்ளார். ஆனால் நான் வேலைக்கு சென்றிருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை. பத்மாவின் உடலில் 6 பவுன் நகைகள் இருந்தன. அதை ஷாபி அடகு வைத்து விட்டதாக கூறப்படுகிறது. கைதான 3 பேருக்கும் தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மகன், மகளின் ரத்த மாதிரி சேகரிப்பு: இதற்கிடையே பகவல் சிங்கின் வீட்டில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட உடல் பாகங்கள் பெண்களின் உடல்கள் தான் என்பது பிரேத பரிசோதனையில் தெரிவந்து உள்ளது. ஆனால் அவை பத்மா, ரோஸ்லியின் உடல்கள் தானா? என்பதை கண்டுபிடிக்க டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும். ஆகவே இதற்கான நடவடிக்கைகளை போலீசார் தொடங்கி உள்ளனர். அதன்படி பத்மாவின் மகன் செல்வராஜ், ரோஸ்லியின் மகள் மஞ்சு ஆகியோரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது. இவை பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

Tags : Kerala , Police decide to interrogate film stars who came to the house where human sacrifice took place in Kerala: 2 schoolgirls exposed after being molested
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...