×

மாநகரை அழகுப்படுத்தும் திட்டத்தின் கீழ் திருச்சியில் போஸ்டர் ஒட்டுவதற்கு 25 இடங்கள் தேர்வு

* முதற்கட்டமாக கோர்ட் எதிரே பதாகை நிறுவிய அதிகாரிகள்

* விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம்

திருச்சி : திருச்சி மாநகராட்சிகுட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக பாதாள சாக்கடை பணிகளும், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள குடிநீர் குழாய் இணைப்பு புதிதாகவும் மாற்றப்பட்டு வருகிறது. இதற்காக சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு உடனடியாக சாலை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகரை தூய்மையாக வைத்திருக்கும் வகையில் பொது இடங்கள் மற்றும் சாலையோரம் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்த கூடாது என உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் முதலில் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். இரும்பு, பிளாஸ்டிக் மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்களை தரம்பிரித்து வழங்குபவர்களுக்கு மாநகராட்சி சார்பில் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.

இதில் மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் கமிஷனர் வைத்திநாதன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முழுவீச்சில் திருச்சி மாநகரை அழகுப்படுத்தும் விதமாக பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகின்றனர். இதில் பூங்காக்களை செப்பனிட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டு வருகிறது. சாலையோரம் நடைபாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மாநகரை மேலும் சீர்ப்படுத்தும் விதமாக அரசு கட்டிட சுற்றுச்சுவர் மற்றும் பொது இடங்களில் சுவரொட்டி (போஸ்டர்) ஒட்டக்கூடாது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதற்காக மேயர் அன்பழகன், கமிஷனர் வைத்திநாதன் தலைமையில் 5 மண்டலத்திற்குட்பட்ட உதவி கமிஷனர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்ட சிறப்பு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாநகரில் சுவர்களில் போஸ்டர் ஒட்டுவதால் மாநகரை அழகுப்படுத்தும் பணி கெடுவதாக எடுத்துரைக்கப்பட்டது.

அதனடிப்படையில், மாநகரில் அரசு சுவர் மற்றும் பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுவதற்கு தனி இடம் ஏற்படுத்துவது, வழங்கப்பட்ட இடத்தில் மட்டுமே போஸ்டர் ஒட்ட வேண்டும், மீறினால் போஸ்டர் அச்சிடுபவர்கள், போஸ்டர் ஒட்டுபவர்கள் மற்றும் போஸ்டர் அடிக்க உத்தரவிடுபவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக லித்தோஸ் உரிமையாளர்கள் மற்றும் போஸ்டர் ஒட்டுபவர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்பட்டது.

இதில் அனைத்து அரசியல் கட்சியினர், திருமண வீட்டார், இறப்பு உள்ளிட்ட துக்க நிகழ்ச்சி, சினிமா போஸ்டர் ஆகியவை அடங்கும். அதனை தொடர்ந்து மாநகரில் உள்ள ரங்கம், அரியமங்கலம், திருவெறும்பூர், பொன்மலை, கோ.அபிஷேகபுரம் என 5 மண்டலங்களில் போஸ்டர் ஒட்டுவதற்காக ஒரு மண்டலத்திற்கு 5 இடங்கள் என மொத்தம் 25 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் திருச்சி ஏர்போர்ட், கோர்ட் வளாகம், மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

இதில் முதற்கட்டமாக திருச்சி பொன்மலை மண்டலத்திற்குட்பட்ட கோர்ட் எதிரே திருச்சி மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட போஸ்டர் (சுவரொட்டி) ஒட்டும் இடம் என்ற வாசகத்துடன் 12 அடிக்கு 8 அடி என்ற அளவில் விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பதாகையில் மட்டுமே போஸ்டர் ஒட்ட வேண்டும். மீறினால் போஸ்டர் ஒட்டுபவர்கள், போஸ்டர் அச்சிட உத்தரவிட்டவர் மற்றும் அச்சக உரிமையாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என பொன்மலை உதவி கமிஷனர் சண்முகம் கூறினார்.

Tags : Trichy , Trichy: New underground sewerage works under the Smart City project in Trichy Municipal Corporation areas, which have been in place for more than 50 years.
× RELATED ஓடும் பஸ்சில் இருக்கையோடு தூக்கி வீசப்பட்ட கண்டக்டர்