விழுப்புரம் நகராட்சியில் திடீர்ஆய்வு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடர்ந்து முறையாக செயல்படுத்த வேண்டும்-அரசு முதன்மைச் செயலாளர் உத்தரவு

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அரசுத்துறை  முதன்மைச் செயலாளர் ஹர்சகாய்மீனா காலை சிற்றுண்டி திட்டத்தை சிறப்பான  முறையில் தொடர்ந்து செயல்படுத்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.விழுப்புரம்  நகராட்சி அரசு  துவக்கப்பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும்  மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்திற்கு  உணவு தயாரிக்கும் இடமான நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சமையல் தயாரிப்பு  இடத்தினை பார்வையிட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசுத்துறை முதன்மை  செயலாளருமான ஹர்சகாய்மீனா ஆய்வு செய்தார்.

உணவு தயாரிப்பதற்காக இருப்பு  வைக்கப்பட்டுள்ள மளிகை பொருட்கள், காய்கறிகள், உணவு தயாரிப்பதற்காக  பயன்படுத்தும் குடிநீரின் தரம் போன்றவற்றையும், மாணவ, மாணவிகளுக்கு உணவு  வழங்கும் விதம் குறித்துஆய்வு செய்து, பின்னர் அவர்களுடன் அமர்ந்து  சிற்றுண்டி அருந்தினார். அதனைத் தொடர்ந்து வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை  கூடத்தில் இருப்புவைக்கப்பட்டுள்ள பொருட்கள் அளவு, இட வசதி, விலை பட்டியல்,  விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டுவாடாவிவரம் குறித்து ஆய்வு செய்தார்.

 பின்னர் அவர் கூறுகையில், தமிழக முதலமைச்சரால் 1 முதல் 5ம் வகுப்பு வரை  படிக்கும் மாணவ, மாணவிகள் நலனை பாதுகாத்திடும் வகையிலும், பசி இல்லாமல் நூறு  சதவீதம் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகவும், சத்துள்ள உணவு வழங்க வேண்டும்  என்பதற்காகவும், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை  செயல்படுத்தியுள்ளார். அதனடிப்படையில் விழுப்புரம், திண்டிவனம்  நகராட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 19 பள்ளிகளில் படிக்கும் 1,855  மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மாணவ, மாணவிகளுக்கு  வழங்கப்படும் உணவு தரமான உணவு பொருட்களை கொண்டு சுகாதார முறையில்  தயாரிக்கப்பட்டு மாணவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையுடன்  வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை சிறப்பான முறையில் தொடர்ந்து  செயல்படுத்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை விற்பனை  கூடத்தை முறையாக பராமரிக்கவும், எதிர்கால தேவைக்கேற்ப விரிவுபடுத்தவும்  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.  அப்போது ஆட்சியர் மோகன்,  அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: