×

கருவேப்பிலங்குறிச்சி அருகே பரபரப்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு- அதிகாரிகள் பேச்சுவார்த்தை

விருத்தாசலம் : வண்ணான்குடிக்காடு கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள வண்ணான்குடிக்காடு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சுமார் மூன்று ஏக்கர் நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக, சுழற்சி முறையில் அனுபவித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் பகுதி மக்களுக்காக இலவச வீட்டு மனை பட்டா திட்டத்தின் கீழ் அந்த இடத்தில் மனை பட்டா கேட்டு போராடி வருகின்றனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அப்பகுதி, அரியலூர் மாவட்டம் ஓலையூர் கிராம எல்லையில் இருப்பதாகவும், அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஆண்டிமடம் வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக எச்சரித்து வந்தனர். இதற்கு வண்ணான்குடிக்காடு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று ஆண்டிமடம் வருவாய் வட்டாட்சியர் ரகுமான் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரமேஷ், ஓலையூர் கிராம நிர்வாக அலுவலர் அருண் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள அங்கு வந்தனர். இதனை அறிந்த வண்ணாங்குடிகாடு கிராம மக்கள், அந்த நிலத்தை 150 வருடங்களுக்கும் மேலாக எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் அந்த இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இப்பகுதியில் எங்கள் கிராமத்தில் வீடு இல்லாத ஏழை ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் பொதுமக்களுக்கும், வருவாய் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து ஆண்டிமடம் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைமணி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.
இருப்பினும் ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றி கொள்ள வேண்டும். இல்லையென்றால் வருவாய்த்துறை மூலம் அகற்றப்படும் என எச்சரித்துவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Karuvepilangurichi , Vridthachalam: There was commotion in Vannankutikkadu village as the public got into an argument with the officials who came to remove the encroachments.
× RELATED நாட்டாமையை தாக்கிய 2 பேர் கைது