×

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு நிறைவு சென்னையிலிருந்து திருவள்ளூருக்கு விழிப்புணர்வு ஜோதி வாகனம்: கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

திருவள்ளூர்: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை 1922ம் ஆண்டு துவங்கப்பட்டு மக்கள் சேவையில் நூறாண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு  திருவள்ளுர் மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக நடைபெற்ற நூறாவது ஆண்டு விழா நடைபெற்றது. சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் கே.ஆர்.ஜவஹர்லால் தலைமை வகித்தார். அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை 1922ம் ஆண்டு துவங்கப்பட்டு மக்கள் சேவையில் நூறாண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு சென்னையில் வரும் டிசம்பர் 5ம் தேதி நடைபெற உள்ள மாபெரும் நிறைவு விழாவிற்கான விழிப்புணர்வு ஜோதி சென்னையில் இருந்து  திருவள்ளுர் மாவட்டத்திற்கு வந்தது. இதைத் தொடர்ந்து, திருவள்ளுர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அந்த ஜோதியை பொதுமக்கள் பார்வைக்காக மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அலுவலர்களிடம் வழங்கி சாதனை விளக்க விளம்பர வாகனத்தை பொதுமக்கள் பார்வைக்காக கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார்.

அப்போது, மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் டிகிரி முடித்ததற்கு பிறகு நான் ஐஏஎஸ் தேர்வில் தேர்வாவதற்கு முன்பு ஏழு மாதம் சிஸ்டம் சர்ஜனாக வேலை செய்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதனால் நாளுக்கு நாள் நேரடியாக வேலை செய்வது குறித்து எனக்கும் தெரியும். பொது சுகாதாரத்துறை தொடங்கப்பட்டு 100 வருடம் நிறைவு பெற்றதற்கான விழாவை கொண்டாடுகிறோம். சுதந்திரம் பெறுவதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட துறை இது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறையாகும். 1922 லிருந்து பல்வேறு சவால்களை  எதிர்கொண்டு தற்சமயம் கோவிட் தொற்றிலும் வெற்றி பெற்றுள்ளோம். நம் திருவள்ளுர் மாவட்டத்தில் தடுப்பூசியையும் கிட்டத்தட்ட 95 சதவிகிதம் முடித்துள்ளோம். அதே அளவுக்கு தமிழகத்திலும் தடுப்பூசி சதவிகிதத்தையும் முடித்துள்ளோம் எனறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகளவில் பணியாற்றிய துறை என்று சொல்வது சுகாதாரத்துறை தான். 2020-ல் கோவிட் தொற்று வந்த கால கட்டத்தில் அதை எப்படி எதிர் கொள்வது, எப்படி பரவுகிறது. அதை எப்படி சரிசெய்வது என்பது தெரியாத இருந்த நேரங்களில், அந்த சவால்களை எதிர்கொள்ள  பொது சுகாதாரத்துறை உடனுக்குடன் களத்தில் இறங்கி செயல்பட்டது. பொது சுகாதாரத்துறை மட்டுமின்றி மருத்துவத் துறை,  மருத்துவ கல்லூரி, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை என பல்வேறு துறைகள் களத்தில் இறங்கி இணைந்து வேலை பார்த்தாலும், அதில் பொதுசுகாதாரத்துறை தான் அந்த தொற்று நோய் தடுப்பிற்கு பெரிய அளவில் உதவிகரமாக இருந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் சுகாதாரத் துறை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்கள் டாக்டர் கே.ஆர்.ஜவஹர்லால், டாக்டர்செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் மிகச் சிறப்பாக  செயல்பட்டது.

கடந்த வருடம் நம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 38 மாவட்டங்களிலும் நம் திருவள்ளுர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய ஒரு துறையாக பொது சுகாதாரத்துறை திகழ்ந்தாக பாராட்டு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை 1922ம் ஆண்டு துவங்கப்பட்டு மக்கள் சேவையில் நூறாண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பிறகு சுகாதாரத் துறையினரின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்  வை.ஜெயக்குமார், தொழுநோய் துறை துணை இயக்குனர் வசந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்திணி, மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Department of Public Health and Disease Prevention ,Jyothi Vahan ,Chennai ,Tiruvallur , Department of Public Health and Preventive Medicines Centenary Awareness Relay from Chennai to Tiruvallur: Flagged off by the Collector
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு